Amazon Layoffs : அமெரிக்காவின் சிலிக்கான் வேளியில் தற்போது பணிநீக்க படலம் நடந்துவருகிறது என்றுதான் கூறவேண்டும். நிதி பிரச்சனை, செலவுகள் உள்பட பல்வேறு காரணங்களை கூறி, பிரபல தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துவருகின்றன.
ஆட்குறைப்பு நடவடிக்கை ஒன்றும் தனியார் துறையில் புதிதில்லை என்றாலும், கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதாரம் சற்று மீண்டெழும் நேரத்தில் மீண்டும் ஆட்குறைப்பு என்பது பலரின் வாழ்க்கையை புரட்டிப்போட வாய்ப்புள்ளது. தற்போது, இந்த பணிநீக்க டிரெண்டை ஆரம்பித்து வைத்தவர், எலான் மஸ்க்.
ட்விட்டர் 44 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியபின், அந்நிறுவனத்தில் அவர் மேற்கொண்டு வரும் அனைத்து அதிரடி நடவடிக்கைகளும், பணியாளர்களின் தலையில் இடியாகவே இருந்துள்ளது. ஆரம்பத்தில், அதிக பணிச்சுமையை சுமத்தி எலான் மஸ்க் அனைவரையும் வேலை வாங்கியுள்ளார்.
மேலும் படிக்க | ஜெஃப் பெசோஸ் தொண்டு நிறுவனங்களுக்கு எவ்வளவு நன்கொடை அளிக்கிறார்? $124 பில்லியன்?
அவர் கொடுத்த அதிக பணியால், பல்வேறு பணியாளர்களும் இரவில் வீடு திரும்பாமல் அலுவலகத்திலேயே உறங்கிவிட்டு பின்னர், மீண்டும் அங்கேயே பணியை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும், சில நாள்களிலேயே ஏறத்தாழ ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களை அவர் பணிநீக்கம் செய்தார்.
மொத்தம் 7 ஆயிரம் பேர் பணியாற்றிய அந்நிறுவனத்தில், 3 ஆயிரத்து 700 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து, மஸ்கின் அடுத்த அதிரடியாக, 4 ஆயிரத்து 400 ஒப்பந்த பணியாளர்களின் பணியும் பறிபோயிருப்பதாக கூறப்படுகிறது.
ட்விட்டரின் இந்த நடவடிக்கைக்கு அடுத்த சில நாள்களில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்து அதிர்ச்சியளித்தது. அந்நிறுவனம் தொடங்கிய 2004ஆம் ஆண்டில் இருந்து, தற்போதுதான் முதல்முறையாக அதிகளவில் பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மெட்டா நிறுவனத்தின் வருவாயில் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதுதான் இந்த ஆட்குறைப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | எலான் மஸ்க் சொன்ன ஒரே வார்த்தை... பணியாளர் ஒரே வாந்தி - என்ன நடந்தது?
இந்நிலையில், இந்த வரிசையில் தற்போது பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில காலங்களாக நிறுவனத்தின் வருவாயில் பெரிதாக லாபமில்லை எனக்கூறப்பட்ட நிலையில், அதன் செலவுகளை குறைக்க இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுக்க உள்ளதாக தெரிகிறது.
மேலும், அந்நிறுவனம் இந்த வாரத்திற்குள் சுமார் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதான், அமேசான் மேற்கொண்ட ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் அதிகபட்ச எண்ணிக்கை கொண்டதாக இருக்கும் என தெரிகிறது.
உலகம் முழுக்க இந்நிறுவனத்தில், சுமார் 16 லட்சம் பேர் பணிபுரிந்து வரும் நிலையில், 1 சதவிதத்தினரை பணிநீக்க செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு, அமேசானின் புகழ்பெற்ற, அலெக்ஸா வாய்ஸ் அஸிஸ்டென்ட் சார்ந்து பணிபுரிபவர்கள், சில்லறை விற்பனை பிரிவை சார்ந்தவர்கள், மனிதவள பணியாளர்கள் ஆகியோர் பலியாக உள்ளதாக கூறப்படுகிறது.
விடுமுறை தினங்களில், அந்நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து காணப்படும். ஆனால், இந்தாண்டு அதன் வருவாயில் பெரும்பகுதி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விடுமுறை தினங்கள் முடிந்த சில நாள்களில் அமேசான் இந்த பேச்சை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அனைத்து பொருள்களின் விலை உயர்வால், நுகர்வோரின் வாங்கும் திறன் குறைந்துள்ளதாகவும், எனவே வியாபாரம் சரியாக இல்லை எனவும் அமேசான் தெரிவித்திருந்தது. கரோனா காலகட்டத்தில் மிகப்பெரும் வருவாயை அமேசான் நிறுவனம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | எலான் மஸ்க் அடுத்தடுத்து அதிரடி? - இன்றும் ஆயிரக்கணக்காணோர் பணிநீக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ