இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ளார்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு இன்று மாலை சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்!
தொடர்ந்து பேசிய அவர் அடுத்து வரும் 7 நாட்களுக்குள் நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியினை முழுமையாக தீர்க்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் தற்போது நடைப்பெறும் பிரச்சினைகளையும், நெருக்கடியையும் தோற்றுவித்தது தான் அல்ல எனவும் ரணில் விக்ரமசிங்கவே தான் என்றும் குறிப்பிட்டார்.
The current political crisis will not drag on beyond seven days. I have always taken decisions in the best interest of the country and the people. pic.twitter.com/zHaDYdlQAF
— Maithripala Sirisena (@MaithripalaS) December 4, 2018
2014-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி தான் எடுத்த தீர்மானமும், கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி எடுத்த தீர்மானமும் சரியானதே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு தீர்மானங்களும் நாட்டுக்காக எடுத்தமையால் சரியானதே என தெரிவித்துள்ளார்.
பிரதமராக பதவியேற்ற நாள்முதல் ரணில் விக்ரமசிங்க 62 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணையை துஷ்பிரயோகம் செய்துள்ளார். ரணில் விக்ரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் நோக்கத்தை பாழாக்கியதோடு, நாட்டையும் நாசமாக்கினார். நாட்டின் முக்கிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சியையும் நாசமாக்கினார். அத்துடன் ஓரளவு என்னையும் நாசமாக்கிவிட்டார் என மைத்திரபால தெரிவித்துள்ளார்.
இவை அனைத்திற்கும் வழங்குவதற்கு என்னிடம் இருந்த ஒரே தீர்வு ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.