இலங்கையில் நடைப்பெற்ற தொடர் குண்டுவெடி தாக்குதலின் பாதிப்பு இன்றும் அடங்காத நிலையில் தற்போது புத்தர் கோவில்களை குறி வைத்து பெண் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று இலங்கை உளவுத்துறை எச்சரித்துள்ளது.
கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகை கடந்த 21-ஆம் தேதி உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இலங்கையில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.
ஈஸ்டர் கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க, கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம், ஷாங்கிரிலா, தி சின்னமோன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி உள்பட பல இடங்களில் திடீர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது.
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதல் தொடர்பாக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கோர தாக்குதலில் 359-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்ரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இலங்கையில் உள்ள புத்தர் கோவில்களில் பெண் பயங்ரவாதிகள் மாறு வேடத்தில் வந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்று இலங்கை உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., கடந்த வெள்ளிக்கிழமையன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள சாய்ந்தமருது என்ற இடத்தில் ராணுவத்தினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த பயங்கரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர்.
இதில் 4 பெண்கள், 6 குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். அந்த வீட்டில் இருந்து ஏராளமான வெடிப்பொருட்கள், வெள்ளை நிற ஆடைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அதேப்போல் கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி கிரியுல்லா என்ற பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் இஸ்லாமிய பெண் ஒருவர் 29 ஆயிரம் மதிப்பிலான இலங்கை ரூபாயில் வெள்ளை நிற ஆடைகளை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
எனவே புத்தர் கோவிலுக்கு பெண் பயங்ரவாதிகள் பக்தர்கள் போர்வையில், வெள்ளை நிற ஆடைகளில் ஊடுருவி தாக்குதல்கள் நடத்தக்கூடும் என இலங்கை உளவுத்துறை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.