தென்கிழக்காசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுவடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்....
சிங்கப்பூரில் தென்கிழக்காசிய நாடுகளின் உச்சி மாநாடு நவம்பர் 11 முதல் 15 வரை 5 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று காலையில் ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு என்கிற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய மோடி தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுவடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டுறவின் மூலம் உலகின் அமைதிக்கும் வளத்துக்கும் பங்களிப்பதாகவும் தெரிவித்தார். இந்த மாநாட்டின் போது சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து நாடுகளுடன் வணிகம், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் மோடி பேச்சு நடத்தினார்.
Prime Minister Narendra Modi poses for a group photograph at the 13th East Asia Summit in Singapore pic.twitter.com/otHEgcRF0A
— ANI (@ANI) November 15, 2018
ஆசியான் மாநாடு நடத்தப்படுவதற்கு முன்பாக, அதன் உறுப்பு நாடுகளும், இந்தியாவும் பங்கேற்ற, ஆசியான் - இந்தியா காலை நேர மாநாடு இன்று நடைபெற்றது. அதில், அந்நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். இதுகுறித்து டுவிட்டரில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “ஆசியான் அமைப்பில் நாடுகளின் தலைவர்களுடன் நல்லதொரு சந்திப்பு நடைபெற்றது. ஆசியான் நாடுகளுடனான நட்புறவு பலமாக உள்ளது என்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அமைதியான, வளமிக்க பூமிக்கான பங்களிப்பையும் அளித்து வருகிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், டுவிட்டரில், “ஆசியான் - இந்தியா காலை நேர மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் வளங்களை மேம்படுத்தும் நோக்கில் வர்த்தகம் மற்றும் முதலீடிகளை பெருக்குவது, கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பு அளிப்பது ஆகியவை குறித்து மோடி மீண்டும் ஒருமுறை உறுதி அளித்தார்’’ என்று தெரிவித்துள்ளது.