சர்ச்சில், மண்டேலாவுக்கு பிறகு பிரதமர் மோடிக்கு கிடைத்த கௌரவம்... அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைப்பு!

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆழமான, நெருக்கமான நட்புறவை மேலும் உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 6, 2023, 01:27 PM IST
  • பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்டின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ அரசு முறைப் பயணத்தை மேற்கொள்கிறார்.
  • பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடன் ஆகியோர் விருந்தளிக்கின்றனர்.
சர்ச்சில், மண்டேலாவுக்கு பிறகு பிரதமர் மோடிக்கு கிடைத்த கௌரவம்... அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைப்பு! title=

வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.  இந்நிலையில், "இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம். புதுடெல்லிக்குச் செல்லும் எவரும் அதைத் தாங்களாகவே பார்த்து உணர முடியும். நிச்சயமாக, ஜனநாயக அமைப்புகளின் வலிமையும் ஆரோக்கியமும் விவாதத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்," என வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் மூலோபாய தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறினார் 

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக வரும் 22-ம் தேதி செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி  இரண்டாவது முறையாக உரையாற்ற உள்ளார். இத்தகைய கவுரவம், இதற்கு முன்பு பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட வெகு சில உலகத் தலைவர்களுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தது. 

மேலும், இந்தியா உடனான அமெரிக்க உறவு குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி கிர்பி கூறுகையில், பல நிலைகளில் அமெரிக்காவுடன் இந்தியா வலுவான நட்புறவு கொண்டுள்ளது என்றார . இது குறித்து மேலும் கூறிய அவர் "ஷாங்க்ரி-லாவில் பாதுகாப்புச் செயலர் (லாயிட், லாயிட்) ஆஸ்டின் சில கூடுதல் பாதுகாப்பு ஒத்துழைப்பை அறிவித்ததை நீங்கள் பார்த்தீர்கள், இப்போது நாங்கள் இந்தியாவுடன் தொடரப் போகிறோம். நிச்சயமாக, எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார வர்த்தகம் உள்ளது. இந்தியா ஒரு பசிபிக் குவாட் உறுப்பினர் மற்றும் இந்தோ-பசிபிக் பாதுகாப்பு தொடர்பான முக்கிய நண்பர் மற்றும் பங்குதாரர்," என்று அவர் கூறினார்.

" இந்தியா நிச்சயமாக முக்கியமான நட்புறவு நாடு என்பதற்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளன, நம் இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு மட்டுமல்ல, பலதரப்பு பல நிலைகளில் உறவு வலுவாக உள்ளது. மேலும் பிரதமர் மோடியை இங்கு வருவதை அதிபர் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார். பரஸ்பர நலன் குறித்த விஷயங்களை அனைத்தையும் பற்றி பேசவும், அந்த கூட்டாண்மை மற்றும் அந்த நட்பை மேலும் வலுப்படுத்தவும் பிரதமர் மோடியின் பயணம் உதவும்," என கிர்பி மேலும் கூறினார்.

திங்களன்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல், இந்தியாவுடனான நட்புறவு என்பது அமெரிக்காவிற்கு மிகவும் பயனுள்ள உறவுகளில் ஒன்றாகும் என்றும், பொருளாதார உறவுகளை ஆழப்படுத்தவும், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் வாஷிங்டன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.  “இந்த மாத இறுதியில் பிரதமர் மோடிக்கு அரசுமுறைப் பயணத்தை எதிர் நோக்கி நாங்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்று படேல் கூறினார். அதிபர் ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடன் ஆகியோரின் அழைப்பைத் தொடர்ந்து பிரதமர் மோடி ஜூன் 22 ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார்.

மேலும் படிக்க | விண்வெளியில் அமெரிக்காவை முந்தும் சீனா... தயாராகும் சீன விண்வெளி நிலையம்!

"இந்தியாவுடனான எங்கள் கூட்டாண்மை எங்களின் மிக முக்கியமான ஒன்றாகும், மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், நமது பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துதல், வர்த்தக உறவுகளை வலுவாக்குவதல் போன்ற பல விஷயங்களில் எங்கள் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ அரசு முறைப் பயணத்தை மேற்கொள்கிறார். அவரது பயணத்தின் போது, பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடன் ஆகியோர் விருந்தளிக்கின்றனர். வெளிவிவகார அமைச்சகம் இதனை புதன்கிழமை செய்தி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

ஜூன் 22 ஆம் தேதி நாட்டிற்கு விஜயம் செய்யும் போது, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்டின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது என்று அமெரிக்க காங்கிரஸால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"உங்கள் உரையின் போது, இந்தியாவின் எதிர்காலம் குறித்த உங்களின் தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்துகொள்ளவும், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்களைப் பற்றி பேசவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்" என்று செனட் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷூமர், செனட் குடியரசுக் கட்சித் தலைவர் மிட்ச் மெக்கானெல் மற்றும் ஹவுஸ் டெமாக்ரடிக் தலைவர் ஹக்கீம் ஜெப்ரிஸ் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பயணம், "அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆழமான மற்றும் நெருக்கமான கூட்டாண்மை மற்றும் குடும்பத்தின் அன்பான பிணைப்புகள் மற்றும் அமெரிக்கா, அமெரிக்கர்கள் மற்றும் தெளிவாக, இந்தியர்களை ஒன்றாக இணைக்கும் நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும். எனவே  பிரதமர் மோடியின் பயணம் அமெரிக்காவிற்கும் அதிபருக்கும் மிகவும் முக்கியமானது,” என்று பிரதமர் மோடியின் அமெரிக்க அரசு பயணம் தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் கூறினார்.

மேலும் படிக்க | விவாகரத்தை 'சுதந்திரம்' என கொண்டாடும் மவுரித்தேனியா பெண்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News