புல்வாமா தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: இம்ரான்கான்

புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தானுக்கு என்ன பயன்? வன்முறையையில் ஈடுபடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 19, 2019, 04:52 PM IST
புல்வாமா தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: இம்ரான்கான் title=

பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 44 இந்திய ராணுவதுணைப்படை வீரர்கள் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்கள் மற்றும் கண்டனங்கள் எழுந்துள்ளது. புல்வாமாவில் ஏற்பட்ட கொடூரமான தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு கோரி வருகிறது. இந்த துயர தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இந்த அமைப்பு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

நேற்று பிரதமர் மோடி மோடி, புல்வாமா மாவட்டத்தில் நடந்த கொடூரமான தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் பேச்சுவாரத்தை என்ற பேச்சுக்கே இடமில்லை. இது பேச்சுவாரத்தை நடத்துவதுவதற்க்கான நேரம் இல்லை. செயல்பாட்டில் இறங்குவதற்கான நேரம். உலக நாடுகள் ஒன்று சேர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்தநிலையில் இன்று தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியாதாவது, புல்வாமா தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எந்தவித ஆதாரமும் இல்லாமல் எங்கள் மீது இந்திய அரசு குற்றம் சாட்டுகிறது. இந்திய அரசு தகுந்த சாட்சியங்களை அளித்தால் தக்க நடவடிக்கையை மேற்கொள்வோம். மேலும் புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தானுக்கு என்ன பயன்? வன்முறையையில் ஈடுபடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பாகிஸ்தான் மண்ணில் இருந்து யாரும் வன்முறையை பரப்புவது இல்லை. அப்படி யாராவது வன்முறையை தூண்டினார் என்ற ஆதாரத்தை இந்திய அரசு அளித்தால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இரு நாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். போரினால் அல்ல. அதையும் மீறி இந்தியா எங்கள் மீது போர் தொடுக்க நினைத்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம். போரை தொடங்குவது எனபது மக்களின் கைகளில் தான் உள்ளது. போரினால் ஏற்படும் விளைவுகள் எந்தவித பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கடவுளுக்கு தான் தெரியும்.

பாகிஸ்தானுக்கு வருகை தந்த சவூதி இளவரசருடன் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நான் இருந்ததால், புல்வாமா தாக்குதலைக் குறித்து இன்று உங்களுடன் பேசுகிறேன். 

இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறினார். 

Trending News