இலங்கை தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்க்ஷக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!
இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதம் 9ஆம் தேதி முடிவடைகிறது. இதையொட்டி, அங்கு அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 12,845 வாக்குச்சாவடிகளில், நேற்று நடைபெற்றது. இதில் 81.52 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் 355 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. கோத்தபய ராஜபக்சே 58,55,255 வாக்குகளை பெற்றிருக்கிறார். சஜித் பிரமேதசா 47,75,517 வாக்குகள் பெற்றுள்ளார். சஜித் பிரேமதாசாவை விட, சுமார் 11 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான திரிகோணமலை, கண்டி, வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில், பதிவான மொத்த வாக்குகளில், 75 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளை, சஜித் பிரேமதாசா பெற்றார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கோத்தபயவுக்கு மிக குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன. இருப்பினும், சிங்களர்கள் அதிகம் வசிக்கும், கொழும்பு, பொலன்னறுவை, கம்பஹா, ஹம்பன்தோட்டா, நுவரெலியா, புத்தளம், மொனராகலை, உள்ளிட்ட மாவட்டங்களில், கோத்தபய ராஜபக்சே அதிகளவிலான வாக்குகளை தனதாக்கியிருக்கிறார்.
50 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றுவிட்டால், அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அத்தகையை பெரும்பான்மையை யாரும், தனதாக்காவிட்டால், வாக்காளர்களின் இரண்டாவது தேர்வை அடிப்படையாக கொண்டு, வெற்றி நிர்ணயிக்கப்படும். இந்த வகையில், இலங்கை அதிபர் தேர்தலில், 52 விழுக்காடு வாக்குகளை பெற்றிருக்கும் கோத்தபய ராஜபக்சே, அந்நாட்டின் அடுத்த அதிபராகிறார். இந்நிலையில், இலங்கை தேர்தலில் வேடர் பெற்ற கோத்தபய ராஜபக்க்ஷக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இது குறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில், "தங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், இருநாடுகளுக்கு இடையே, நெருக்கமான, சகோதரத்துவ உறவுகளை மேலும் ஆழமானதாக மாற்ற முடியும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நமது பிராந்தியத்தில், அமைதி, நல்லிக்கணக்கம், மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதை தாம் எதிர்நோக்கியிருப்பதாக மோடி தெரிவித்திருக்கிறார். அதிபர் தேர்தல் அமைதியாக நடைபெற்றதை உறுதிப்படுத்திய இலங்கை மக்களை பாராட்டுவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
Congratulations @GotabayaR on your victory in the Presidential elections.
I look forward to working closely with you for deepening the close and fraternal ties between our two countries and citizens, and for peace, prosperity as well as security in our region.
— Narendra Modi (@narendramodi) November 17, 2019
இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.