Yuan Wang 5: சர்ச்சைக்குரிய சீனாவின் 'யுவான் வாங்' கப்பல் இலங்கை வந்தடைந்தது

Yuan Wang 5 in Sri Lanka: சீன 'உளவு' கப்பலான யுவான் வாங்-5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்தது. எச்சரிக்கும் இந்தியா. மவுனம் காக்கும் இலங்கை. 

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 16, 2022, 03:38 PM IST
  • 'யுவான் வாங் 5' கப்பலின் வருகையை தடுக்குமாறு இலங்கையிடம் இந்தியா கோரியது.
  • இலங்கைக்கு டோர்னியர் 228 கண்காணிப்பு விமானத்தை இந்தியா பரிசாக வழங்கியது.
  • ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருட குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Yuan Wang 5: சர்ச்சைக்குரிய சீனாவின் 'யுவான் வாங்' கப்பல் இலங்கை வந்தடைந்தது title=

சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்றான 'யுவான் வாங் 5' (Yuan Wang 5) கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து கடந்த சில நாட்களாக எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது இந்த கப்பல் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நுழைந்தது. சீனாவின் இந்த செயற்பாடுகள் குறித்து இந்தியா மற்றும் அமெரிக்கா தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. அப்படியென்றால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்தபடியே, இந்தியாவின் மிக முக்கியமான கேந்திர நிலையங்களை இந்த கப்பல் உளவு பார்க்கும் என்பது இந்தியாவின் புகாராக உள்ளது. எனவே இந்த கப்பலின் வருகையை தடுக்குமாறு இலங்கையிடம் இந்தியா கோரியது.

கடந்த 11ஆம் தேதி இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்து, அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து பின்னர் ஆகஸ்ட் 17ஆம் தேதி புறப்படும் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியா இந்த கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதன் பிறகு யுவான் வாங் 5 கப்பல் - ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை தள்ளிவைக்குமாறு, கொழும்பிலுள்ள சீன தூதரகத்திடம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு ஆகஸ்ட் 5 ஆம் தேதி கோரிக்கை விடுத்தது. இருப்பினும் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை, சீனாவை பகைத்துக் கொள்ள கூடாது என அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து சனிக்கிழமையன்று நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கொழும்பு யூ-டர்ன் அடித்தது. கப்பல் ஹம்பாந்தோட்டையில் வந்து ஆறு நாட்கள் இருக்க அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறியது. அதாவது சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5-ஐ, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை வெளியுறவுத்துறை கடந்த சனிக்கிழமையன்று அனுமதி வழங்கியிருக்கிறது. இருப்பினும் இந்த கப்பலை நிறுத்த அனுமதிக்கும் விவகாரத்தில் இந்தியா தீவிர அழுத்தம் கொடுத்ததாக சீனா குற்றம்சாட்டிய நிலையில், நிபந்தனைகளுக்கு உள்பட்டு சீன கப்பல் வருவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

மேலும் படிக்க: சீன உளவு கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்து - ராமதாஸ் எச்சரிக்கை

இந்நிலையில், சீனாவின் 'யுவான் வாங் 5'  கப்பல் இலங்கைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, தீவின் கடல்சார் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்தும் முயற்சியில், இலங்கைக்கு டோர்னியர் 228 கண்காணிப்பு விமானத்தை இந்தியா பரிசாக வழங்கியது.

2007ஆம் ஆண்டில் இந்த யுவான் வாங் 5 கப்பல் சேவையை தொடங்கியபோது, அது ஒரு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் எடை 11 ஆயிரம் டன் எடையாகும். எரிபொருள் நிறுத்தவும், பராமரிப்புக்காகவும் அந்த கப்பல் இலங்கைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் 2017ஆம் ஆண்டு 1.12 பில்லியன் டாலருக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனா அரசால் நடத்தப்படுகிறது.

2005 மற்றும் 2015 க்கு இடையில் இலங்கை சீனாவிடம் இருந்து பெருமளவு கடன் வாங்கியது, மேலும் கடனை திருப்பிச் செலுத்துவதில் பின்தங்கிய பின்னர் 2017 இல் பெய்ஜிங்கிற்கு கிழக்கு-மேற்கு முக்கிய கப்பல் பாதைகளில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியது.

மேலும் படிக்க: இலங்கையை போலவே சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள பாகிஸ்தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News