DeepFake AI: ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாகும் போலிகள் - வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்

ஏஐ தொழில்நுட்பத்தில் டீப் பேக் என்பது பலரையும் அச்சுறுத்தக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாரை வேண்டுமானாலும் சமூக விரோத குற்றச் செயல்களில் சிக்க வைக்கவும், ஆபாச வீடியோக்களில் சித்தரிக்கவும் முடியும்  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 28, 2023, 06:45 PM IST
  • அச்சுறுத்தும் டீப் பேக் தொழில்நுட்பம்
  • ஏஐ உலகில் காத்திருக்கும் மிகப்பெரிய சம்பவம்
  • ஒருவரின் மதிப்பை நொடியில் சீர் குலைத்துவிடும்
DeepFake AI:  ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாகும் போலிகள் - வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள் title=

கடந்த சில வருடங்களில், இணையத்தின் வீச்சு அதிகரித்துள்ளதால், சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் என நமது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொழில்நுட்பத்தை நேர்மறையான திசையில் பயன்படுத்துவதன் மூலம் மனித வாழ்க்கையை மேம்படுத்த முடியும். அதன் தவறான பயன்பாடு சமூகத்திற்கு ஆபத்தானது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அதனால் தான் இணையம் மூலம் போலி செய்திகளை பரப்புவது தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

பொதுவாக மக்களை தவறாக வழிநடத்துதல், ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துதல், மத பிளவுகளை ஏற்படுத்துதல் போன்ற நோக்கத்துடன் போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்களில் இதுபோன்ற தவறான செய்திகள், பிரச்சாரங்கள், வதந்திகள் அதிகம் பரப்பப்பட்டு சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கி வருகின்றனர். இது இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

டீப் பேக் செயலி

அதில், டீப் ஃபேக் என்பது போலிச் செய்திகளின் மேம்பட்ட மற்றும் ஆபத்தான வடிவமாகும். தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புவதற்கு இது ஒரு புதிய வாய்ப்பாக உருவெடுத்துள்ளது. பொதுவான போலிச் செய்திகளை பல வழிகளில் சரிபார்க்க முடியும் என்றாலும், ஒரு சாதாரண மனிதனுக்கு டீப் பேக் மூலம் உருவாக்கப்படும் வீடியோவை அடையாளம் காண்பது என்பது மிகவும் கடினம். அசலைப் போலவே தோற்றமளிக்கும் படங்கள், ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களை இதன் மூலம் உருவாக்க முடியும். செயற்கை நுண்ணறிவின் ஆபத்தான வடிவமாகவும் இது பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | மத்திய அமைச்சருக்கே ஆபாச படம்... வீடியோ காலில் மிரட்டல் - கொத்தாக தூக்கிய போலீசார்!

இது எப்படி வேலை செய்கிறது?

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, ஒரு நபரின் பேசும் வார்த்தைகள், உடல் அசைவுகள் அல்லது வெளிப்பாடுகளை அச்சு அசலாக மற்றொரு நபரின் உடல் மொழியுடன் பொருத்தப்பட முடியும். ஜெனரேட்டிவ் அட்வர்ஸரியல் நெட்வொர்க்குகளை (GAN) பயன்படுத்துவதன் மூலம் இதை மேலும் 'நம்பகமானதாக' மாற்றலாம். இதனால், பெரும்பாலான சூழ்நிலைகளில் காண்பிக்கப்படும் இதுபோன்ற வீடியோக்கள் உண்மையானதா அல்லது போலியானதா என்பதைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருக்கும். 

டீப் பேக் செயலியால் பெரும் ஆபத்து

எந்தவொரு தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடும் பேரழிவை ஏற்படுத்தும். இதற்கு டீப்ஃபேக்குகள் இதற்கு நேரடி உதாரணம். இதனைக் கொண்டு ஒரு நபரின் அரசியல், சமூக, பொருளாதார வாழ்க்கையை முற்றும் முழுதாக பாழாக்கவிட முடியும். இதற்கு உதாரணமாக, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் டீப் பேக் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் இருக்கிறது. அதனை நீங்கள் பார்த்தால் டீப் பேக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்பதை நம்புவது கடினம். இதனை வைத்தே இந்த தொழில்நுட்பம் எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்

டீப்ஃபேக்குகளின் பயன்பாடு ஜனநாயகத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். தேர்தல் நேரத்தில் ஒரு வேட்பாளர் பேசாத வெறுக்கத்தக்க பேச்சு, இனக் கருத்து அல்லது சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக பேச்சுகளை டீப் பேக் செயலிகள் மூலம் உருவாக்கி வெளியிடப்படும் வீடியோக்கள் தேர்தலின்போது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கற்பனை செய்து பாருங்கள். இதனால் ஒரு தேர்தல் முடிவே கூட மாறும் ஆபத்து இருக்கிறது. அதாவது ஒரு நாட்டின் முழு தலையெழுத்தும் மாறக்கூடும். அதனடிப்படையில் பார்த்தால் இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரி. 

பெண்கள் பாதுகாப்பு

டீப்ஃபேக்குகள் நீண்ட காலமாக ஆபாசப் படங்களில் பிரபலங்களின் முகங்களைக் கொண்டு ஆபாச நட்சத்திரங்களின் உருவத்தை மாற்றியமைக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான சூழ்நிலைகளில் பெண்கள் டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் குறிவைக்கப்படுகிறார்கள். ஒரு நபரை மனரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாதிக்கும் நோக்கத்தில் இத்தகைய வீடியோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது தவிர, ஒரு நபரை மிரட்டவும் பயன்படுத்தப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு

டீப்ஃபேக் போன்ற தொழில்நுட்பம் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இதன் மூலம் வகுப்புவாத கலவரம், ஜாதிவெறி போன்ற பிரச்சனைகளை ஊக்குவிக்க முடியும். வதந்திகளால் ஒரு கும்பல் அடித்துக் கொல்லப்படுவது போன்ற சம்பவங்களை போலியாக கட்டமைக்க முடியும். இது இந்தியாவில் அதிகரித்து வரும் சமூக ஊடகங்கள் தாக்கத்தில் மிகப்பெரிய விளைவை உண்டாக்க வல்லது. இந்தியாவில் இருக்கும் கல்வியறிவின்மையை கருத்தில் கொண்டால்,  இந்த தொழில்நுட்பம் வருங்காலத்தில் ஏற்படுத்தப்போகும் சம்பவங்களை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 

பொருளாதாரம்

ஒரு நிறுவனத்திற்கு நிதி ரீதியாக தீங்கு விளைவிக்க டீப்ஃபேக்குகள் பயன்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனம் வணிகத்தில் முதலீடு செய்யும் நோக்கத்திற்காக நிதி திரட்ட முயற்சிக்கிறது. அதே நேரத்தில் ஒரு இயக்குனர் அல்லது நிறுவனத்தின் குழு உறுப்பினர்களின் ஆடியோ அல்லது வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அந்த வீடியோவில் அவர் தனது நிறுவனத்தைப் பற்றி அல்லது தயாரிப்பு பற்றிய அச்சத்தை வெளிப்படுத்துவதுபோல் இருக்கிறது எனில், அது அந்த நிறுவனத்தின் மீதும், பொருளாதாரத்திலும் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். 

போலிச் செய்திகளை எவ்வாறு கண்டறிவது?

சமூக ஊடகங்கள், சந்தேகத்திற்கிடமான இணையதளங்கள் போன்ற சந்தேகத்திற்குரிய ஆதாரங்களில் காணப்படும் தகவல்களை உடனடியாக நம்ப வேண்டாம். இதுபோன்ற செய்திகளை கூகுளில் தேடுவதன் மூலம் சரிபார்க்கலாம். இது தவிர, சந்தேகத்திற்கு இடமான எந்த செய்தியையும் சமூக வலைதளங்களில் அது உறுதி செய்யப்படும் வரை பகிர வேண்டாம். ஃபோட்டோஷாப் மூலம் தவறான படங்களைத் தயாரித்து தவறான செய்திகளைப் பரப்புவது தற்போதைய சூழ்நிலையில் சகஜமாகிவிட்டது, எனவே இதுபோன்ற எந்தப் படத்தையும் கூகுள் இமேஜில் பதிவேற்றி அதன் உண்மையை தன்மையை சரிபார்க்கலாம்.

மேலும் படிக்க | ஆபாச சாட்டிங்கில் சிக்க வைக்கும் வாட்ஸ்அப் கால் - மோசடி கும்பலின் புதிய யுக்தி: எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News