உலக சிக்கன நாள்: தமிழக முதல்வர் வாழ்த்து

இன்றைய சேமிப்பே நாளைய வாழ்வின் பாதுகாப்பு என்பதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு சிறக்க, அருகிலுள்ள அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற்றிட வேண்டும்.

Last Updated : Oct 29, 2017, 12:41 PM IST
உலக சிக்கன நாள்: தமிழக முதல்வர் வாழ்த்து title=

உலக சிக்கன நாள் செய்தி குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சிக்கனம் மற்றும் சேமிப்பின் அவசியத்தை மக்களிடையே ஏற்படுத்திடும் நோக்கில் ஆண்டுதோறும் அக்டோபர் திங்கள் 30-ம் நாள் """"உலக சிக்கன நாள்"" கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனும் தனது எதிர்கால வாழ்வு ஒளிமயமாக அமைந்திட, சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து, சிக்கனமாக வாழ்ந்து, தனது உழைப்பால் ஈட்டிய பொருளை குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் சேமிக்க வேண்டும்.
அதேபோன்று, பெற்றோர்கள் தாங்களும் சேமித்து, தங்களது பிள்ளைகளுக்கும் சிறு வயது முதலே சேமிக்கும் பண்பினை ஊட்டி வளர்த்திட வேண்டும்.

மக்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை, சிறுசேமிப்பிற்கு உகந்த அமைப்பான அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதால், அந்தத் தொகை சிறுதுளி பெரு வெள்ளமெனப் பெருந்தொகையாகி அவசர காலங்களில் ஏற்படும் எதிர்பாராச் செலவினங்களை எதிர்கொள்ள பெரிதும் பயன்படும்.

இன்றைய சேமிப்பே நாளைய வாழ்வின் பாதுகாப்பு என்பதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு சிறக்க, அருகிலுள்ள அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற்றிட வேண்டுமென, இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

Trending News