அரசுப்பள்ளிகளில் 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' ஏன் கற்பிக்கக்கூடாது? என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கேள்வி.....
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச கற்றுக்கொடுக்க வேண்டும் மற்றும் அனைத்து தமிழ் வழி பள்ளிக்கூடங்களிலும் ஸ்போக்கன் இங்கிலீஷை ஒரு பாடமாக எடுத்து நடத்த வேண்டும் என தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தமிழகத்தில் சுமார் 37,211 அரசு பள்ளிகளும், 12,419 தனியார் பள்ளிகளும், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும் இயங்கிவருகிறது. இந்த பள்ளிகளில் சுமார் ஒரு கோடியே 25 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்காக ஆண்டுக்கு ரூ.27 ஆயிரம் கோடியை அரசு செலவு செய்கிறது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பை முடித்த பிறகு, ஆங்கில பேச்சு திறன் இல்லாத காரணத்தால், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேர முடியாத நிலையில் உள்ளனர். நல்ல வேலை வாய்ப்புகளையும் அவர்களால் பெற முடியவில்லை. எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்தவும், LKG மற்றும் UKG மழலையர் வகுப்புகள் தொடங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் "போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் தமிழ் மாணவர்களுக்காக, அரசு பள்ளிகளில் ஏன் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புக்களை நடத்தக் கூடாது?" என நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இந்த வழக்கில் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.