சென்னை: தமிழகத்தில் நிலவும் வரும் பரபரப்பான அரசியல் குழப்பத்துக்கு முடிவுகட்டும் வகையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று யார் தமிழகத்தின் முதல்வர் என்ற முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி இருந்தார்.
அதேநேரத்தில் கடந்த 9-ம் தேதி கவர்னரிடம் அளித்த மனுவில், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், அதை நிரூபிக்க சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டுமென்றும் கோரியிருந்தார்.
இந்நிலையில் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் என இருதரப்பினருமே நேற்றிரவு கவர்னரை மீண்டும் சந்தித்து பேசினர்.
இதில், எடப்பாடி பழனிச்சாமி தனக்கு ஆதரவான எம்.எல்.ஏ.,க்கள் கடிதத்தினை அளித்தார். இந்தசூழலில் தமிழக அரசியல் குழப்பத்துக்கு முடிவுகாணும் வகையில், கவர்னர் இன்று முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.