இலங்கை அரசின் சட்டத்தை திரும்பப்பெற அழுத்தம் தரவேண்டும்: வைகோ

இலங்கை அரசின் சட்டத்தை திரும்பப்பெற அழுத்தம் தரவேண்டும் என மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார். 

Last Updated : Jan 27, 2018, 08:57 AM IST
இலங்கை அரசின் சட்டத்தை திரும்பப்பெற அழுத்தம் தரவேண்டும்: வைகோ title=

இலங்கை அரசின் சட்டத்தை திரும்பப்பெற அழுத்தம் தரவேண்டும் என மத்திய அரசுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளது:- தமிழக மீனவர்களுக்கு எதிராக ஒரு கடுமையான சட்டத்தை இலங்கை அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கின்றது. அதன்படி, எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் மீனவர்களைக் கைது செய்து, 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20 லட்சம் முதல் ரூ.7 கோடி வரை அபராதம் விதித்தல், படகுகளைப் பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறுகின்றது.

தமிழக மீனவர்களை மீன்பிடித் தொழிலுக்கே வரவிடாமல் அச்சுறுத்தி, அவர்களைத் தொழிலில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு, இலங்கை அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்திய அரசு தமிழக மீனவர்களைக் கைவிட்டதால், இலங்கை பாராளுமன்றத்தில் இந்த கருப்புச் சட்டம் நிறைவேறி இருக்கின்றது. தமிழக சட்டமன்றத்தின் ஒப்புதலை பெறாமல், கச்சத்தீவைத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்ட இந்திய அரசு, அந்த ஒப்பந்தப்படி தமிழக மீனவர்கள் கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை, மீன்பிடி வலைகளை உலர்த்தும் உரிமை இருக்கின்றது என்பதை மறந்து விட்டது.

தமிழக மீனவர்களை இந்தியர்களாக மத்திய பா.ஜ.க. அரசு கருதவில்லையா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. தமிழகத்தின் உரிமைகளை எல்லாம் பறித்துத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசின் சட்டத்தை திரும்பப்பெற அழுத்தம் தரவேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

என்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Trending News