சுங்க சாவடி வரி வசூலை எதிர்த்து மார்ச், 30-ம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் நடக்க உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த, நான்கு லட்சம் லாரிகள் பங்கேற்கும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான வாட் (VAT) வரி உயர்வு நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனால் லாரிகள் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எனவே இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு லாரியின் பெயரில் ரூ.21000 மட்டும் தான் ரோட் டாக்ஸ் வரி செலுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த இன்சூரன்சு உயர்வு மிகப்பெரிய கொள்ளை ஆகும். தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் மத்திய அரசின் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் சுங்க வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.
முக்கியமாக சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து (ஜி.எஸ்.டி) லாரி உரிமையாளர்களுக்கு முழுவதும் விலக்கு அளிக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தை காட்டி அதிக அபராதம் விதிப்பதையும் நிறுத்திட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகிற 30-ம் தேதி முதல் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பால், தண்ணீர், மருந்துகள் ஏற்றிச்செல்லும் லாரிகள் தவிர மற்ற எல்லா சரக்கு லாரிகளும் ஓடாது. கோரிக்கைகள் ஏற்பதில் தாமதம் ஏற்படும் வகையில் போராட்டம் மேலும் தீவிரமடையும் என லாரி உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி பேசியதாவது:
இந்தியா முழுவதும், 363 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில், 41 சுங்க சாவடிகள் உட்பட தென் மாநிலங்களில், 117 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில், 26 சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் வரி வசூல் செய்து வருகின்றனர்; இதை கண்டிக்கிறோம். தமிழக அரசு டீசல் மீது வாட் வரியை உயர்த்தி உள்ளதால் இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் 40 ஆயிரம் லாரிகள் தமிழகத்தில் டீசல் பிடிக்காமல் வெளிமாநிலங்களுக்கு சென்று டீசல் பிடிக்கின்றன. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, உயர்த்தப்பட்ட காப்பீடு கட்டணம், வாகன பதிவு கட்டணம், 15 ஆண்டு ஆயுள் கடந்த லாரிகளை அழித்தல், டீசல் மீது வாட் வரி ஆகியவற்றை வாபஸ் பெற கேட்டு வரும் 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளோம். தென் மாநிலங்களில் 9.50 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.600 கோடி முதல் ரூ.800 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும். இது நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில், 1.5 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.