கோவையில் ரூ.166 கோடி மதிப்பிலான பில்லூர் 3வது குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்..!
கோவையில் ரூ.166 கோடி மதிப்பிலான பில்லூர் 3 ஆவது குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, கோவையில் ரூ.238.40 கோடியில் நிறைவுற்ற திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணிக்கு கோவை வந்தார். இதையடுத்து, முதல்வர் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் பில்லூர் மூன்றாம் குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்.
இதை தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பகுதியில் 39 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் பேரூர் சாலையை ஒட்டியுள்ள பெரிய குளத்தின் வடகரையில் புனரமைக்கப்பட்ட ஒரு பகுதியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதல்வர். மேலும், கோவை மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் வாலாங்குளம் மேம்பாலத்தின் கீழ் மேம்பாடு செய்யப்பட்ட ரூ 23 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட பகுதியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார்.
READ | கூட்டுறவு வங்கிகளை RBI கீழ் கொண்டுவருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது: MKS
இதையடுத்து, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ 2 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தையும் திறந்து வைத்தார். மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய கட்டிடம் ஒன்றையும் அவர் திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதிய கட்டிடம் திறந்து வைக்கபட்டது.
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 60 லட்சம் மதிப்பீட்டில் செட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மைய கட்டிடத்தை காணொளிக் கட்சி மூலமாக முதலமைச்சர் EPS திறந்து வைத்தார். இதையடுத்து, அரசு துறை அனைத்து அலுவலர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.