காற்று மாசு காரணமாக சென்னையில் யாருக்கும் சுவாச கோளாறு ஏற்பட்டதாக தகவல் இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்!!
சென்னை: சென்னையில் நிலவிவந்த காற்று மாசு சற்று குறைந்தாலும், அடர் புகைமூட்டதால் மக்கள் அவதியுறுகின்றனர். கடந்த ஏழு நாட்களாக சென்னையில் காற்று மாசு மோசமாக இருந்ததது. காற்றின் மாசு தர மதிப்பீட்டில் அதிக பட்சம் 262 என்ற அளவில் இருந்து 234 ஆக குறைந்துள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடுகைளில், 28 புள்ளிகள் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. காற்றின் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில், படிப்படியாக அடர் புகைமூட்டம் குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப்சிங்பேடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற காற்று மாசு குறித்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், 'காற்று மாசை கண்டு மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், சென்னையில் படிப்படியாக காற்றின் மாசு குறையும் எனவும் தெரிவித்தார். மேலும், சமூக வலைதள தகவலை மக்கள் நம்ப வேண்டாம் எனவும், காற்றுமாசு காரணமாக சென்னையில் யாருக்கும் சுவாச கோளாறு ஏற்பட்டதாக தகவல் இல்லை எனவும் தெரிவித்தார்.
கடல்காற்று முழுமையாக வராததாலும், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் சென்னையில் காற்றுமாசு அதிகரித்துள்ளதாகவும், வாகனப்புகை, தொழிற்சாலைகளின் புகை காரணமாகவும் அதிகாலையில் காற்று மாசு அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவித்தார்.