தமிழகத்திற்கான உரிமைகளைப் பெற நாடாளுமன்றத்தில் போராடுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் நூற்றாண்டு விழா நடத்தும் போது தமிழகத்தில் ஆட்சியில் இருப்போம் என்று சூளுரைத்தார். திமுக ஆட்சிக்கு வரவில்லையே என்று திமுகவினர் கவலை கொள்ள வேண்டாம் என்று கூறிய ஸ்டாலின், ஒன்றரை வருடத்திற்குப் பிறகு எப்போதுமே திமுக ஆட்சிதான் என்றும் தெரிவித்தார்.
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர தொடர்ந்து போராடுவோம் என்று கூறிய ஸ்டாலின், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால் தமிழகத்திற்கு என்ன பயன் என்பதை நாடாளுமன்றம் கூடும் போது நிரூபித்து காட்டுவோம் என்றார்.
இந்தி திணிப்பை என்றைக்கும் எதிர்ப்போம் என்றும், அதில் சமரசம் செய்து கொள்ளப்போவது இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் 3 நாட்களுக்குள் மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்காவிட்டால், கூட்டணி கட்சி தலைவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரித்தார்.
முன்னதாக திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கருணாநிதியின் சிலையை பரிசாக வழங்கி ஸ்டாலின் கவுரவித்தார். கூட்டணி கட்சிகளின் சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஸ்டாலின் நினைவு பரிசுகளை வழங்கினார். இந்த கூட்டத்தில், வைகோ, கே.எஸ்.அழகிரி, முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன், ஈ.ஆர்.ஈஸ்வரன்உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் உரையாற்றினர்.