மோடி அரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் வருமானவரி சோதனை நடக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில், வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர். தனது மகன் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காக சிலர் செய்த சூழ்ச்சி இது என துரைமுருகன் சாடியுள்ளார். இந்நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டின் வருமானவரி சோதனை நடத்தப்பட்டதற்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் மோடியே தலையிட்டு சோதனை நடத்த உத்தரவிட்டிருப்பதாகவும் திமுக ஒரு பனங்காட்டு நரி என்றும், இந்த வெற்று சலசலப்புக்கு அஞ்சி ஓடிவிடாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும் என்ற கருத்து கணிப்புகளை ஏற்க முடியாததாலேயே, பிரதமர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தங்கள் ஆட்சியில் என்ன செய்தார்கள் என்பதை சொல்லி பாஜக, அதிமுகவால் வாக்கு கேட்க முடியவில்லை; சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டால் நான் விமர்சிக்காமல் இருக்கலாம் என மறைமுகமாக தாக்கியுள்ளார். திமுகவுக்கு பெயர் வந்துவிடும் என்பதால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டது அதிமுக. மோடி அரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் வருமானவரி சோதனை நடக்கிறது. புகாரளித்ததால் சோதனை செய்கிறார்கள் என தமிழக தேர்தல் அதிகாரி கூறுகிறார். அப்போ, மோடி வீட்டில் கறுப்புப்பணம் உள்ளது என நான் புகாரளித்தால் சோதனை நடத்துவார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.