காஞ்சிபுரத்தில் நடைபெற்று வந்த அத்திவரதர் பெருவிழாவின் பக்தர்கள் தரிசனம் நள்ளிரவில் நிறைவு பெற்றது!!
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் பெருவிழா கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கியது. இதற்காக ஜூன் 28 ஆம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் புஷ்கரணியில் இருந்து அத்தி வரதர், வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். தைலக்காப்புகள் பூசப்பட்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அத்தி வரதர் சயன கோலத்தில் நாள்தோறும் பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.
காஞ்சிபுரத்தில் 31 நாட்கள் சயன கோலத்திலும், 16 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சியளித்து வந்த அத்தி வரதர் தரிசனம் அதிகாலையுடன் நிறைவடைந்தது. கடந்த 47 நாட்களில் நாட்டின் முதல் குடிமகன் முதல் கடைக்கோடி பக்தர்கள் வரை ஒரு கோடியே 4 லட்சம் பேர் அத்தி வரதரை தரிசித்துள்ளனர்.
அத்திவரதரின் சயன கோல தரிசனம் கடந்த மாதம் 31-ந்தேதியுடன் முடிவடைந்தது. சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதரை 50 லட்சம் பேர் தரிசனம் செய்திருந்தனர். கடந்த 1 ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆகம விதிகளின்படி கடைசி நாளான நாளை (சனிக்கிழமை) கண்டிப்பாக அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என்பதால் கடைசி நாள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் 48 நாட்களாக இருந்த அத்திவரதர் தரிசனம் 47 நாளாக குறைந்தது.
அத்திவரதரை சயன கோலத்தில் தரிசனம் செய்தவர்கள், நின்ற கோலத்திலும் பார்த்து விட ஆர்வம் காட்டினர். இதனால் கடந்த 16 நாட்களும் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சயன கோல தரிசனத்துக்கு திரண்ட பக்தர்களை விட நின்ற கோலத்தில் அத்திவரதரை காண்பதற்கே அதிக கூட்டம் திரண்டது.
இறுதி நாளைக்கு முந்தைய தினமான நேற்றும் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று 4½ லட்சம் பேர் திரண்டிருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாலை 5 மணிக்கு மேல் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர், கழிவறை, தற்காலிக மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. குற்ற சம்பவங்களை தடுக்க கோவில் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடைசி நாளான நேற்று நள்ளிரவு வரை அத்தி வரதர் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதன் பிறகு அத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்று விடும். இதனை தொடர்ந்து நடை சாத்தப்பட்டு அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். நாளை (17 ஆம் தேதி) அத்திவரதர் குளத்தில் வைக்கப்படுவார். இதன் பின்னர் அத்திவரதரை 40 ஆண்டுகள் கழித்தே வெளியில் எடுப்பார்கள். அத்திவரதரை இப்போது தரிசனம் செய்யாதவர்கள் இனி 2059 ஆம் ஆண்டில்தான் தரிசிக்க முடியும்.