தமிழகம் உட்பட 4 மாநில நீர்பங்கீடு பிரச்னையை தீர்க்கும் விதமாக காவிரி ஆணையத்தை ஜூன் மாதம் முதல் வாரத்துக்குள் அமைத்து அதை அரசிதழில் வெளியிட வேண்டுமென மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு இரு வாரங்களுக்கு முன்பு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழகம் உட்பட 4 மாநிலங்களிலும் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான பெயர் பட்டியலை அனுப்பி வைக்கும்படி மத்திய அரசு கடிதம் அனுப்பியிருந்தது
இதன்படி, தமிழகம் சார்பில் எஸ்.கே.பிரபாகர், செந்தில்குமார் ஆகிய 2 பிரதிநிதிகரளையும் நியமிக்க தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் கர்நாடகா சார்பில் எந்த பிரதிநிதிகளும் இதுவரை நியமிக்கப்படவில்லை.
ஏற்கனவே தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் உறுப்பினர் பட்டியலை சமர்ப்பித்துள்ளன. கர்நாடகா காலம் தாழ்த்துவதால் வரும் 12-ந் தேதிக்குள் மத்திய நீர்வளத்துறையிடம் காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பிக்க மத்திய அரசு, கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.