பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அவர்கள் நாட்டில் உருவாக்கப்படும் பொம்மைகளை அதிக அளவில் வாங்க வேண்டும் என்று சமீபத்தில் மக்களை வலியுறுத்தியுள்ளார். இது பாரம்பரியமான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளைச் (Tanjore Dancing Dolls) செய்யும் கலைஞர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளைச் செய்யும் கைவினைஞர்கள், தேவையான அரசாங்க ஆதரவு கிடைக்காததால், சமீப காலங்களில் பிற தொழில்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொழிலில் இன்னும் ஈடுபட்டுள்ள ஒரு சில கைவினைஞர்கள், தங்களுக்கு நிதி உதவி அளிக்குமாறு அரசாங்கத்தைக் கோரி வருகின்றனர். அதன் மூலம் தஞ்சாவூரின் பெருமை மீண்டும் புதுப்பிக்கப்படும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
பிரதமர் மோடி தனது ‘மன் கி பாத்’ (Man Ki Baat) நிகழ்ச்சியில், தஞ்சாவூர் பொம்மைகள் போன்ற பாரம்பரிய கலைகளின் மறுமலர்ச்சியின் அவசியத்தை பரிந்துரைத்து, உள்நாட்டிலேயே அதிக பொம்மைகளை (Desi Dolls) தயாரிக்குமாறு மக்களை வலியுறுத்தினார். இந்த ஆலோசனையானது தஞ்சாவூரில் உள்ள கைவினைஞர்களிடையே ஒரு நேர்மறையான அலையை உருவாக்கியுள்ளது. இதற்குப் பிறகு அதிக ஆர்டர்களையும் அதன் மூலம் நல்ல வருவாயையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். கலைஞர்களிடையே தொழிலை புதுப்பிக்கும் மனநிலையும் வந்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தன. ஆனால் தற்போது, 20 குடும்பங்கள் மட்டுமே இதில் ஈடுபட்டுள்ளன. இந்த பொம்மைகளை தயாரிப்பதற்கு அதிக திறமையும் பொறுமையும் தேவைப்படுகிறது. ஆனால் இதில் வரும் லாபமோ குறைந்து கொண்டே வருகிறது. எனினும், சிலர் மட்டும் தலைமுறை தலைமுறையாக இந்த தொழிலை விடாமல் செய்து வருகிறார்கள்.
ALSO READ: சித்த மருத்துவத்துக்கு தனித்துறை அமைத்து சென்னையில் தலைமை அலுவலகம் தேவை: PMK
இது ஒரு காலத்தில் லாபகரமான மற்றும் மதிப்புமிக்க வேலையாக இருந்தது. ஆனால் பெரும்பாலான மக்கள் மலிவான, சீனாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளைத் தேர்ந்தெடுத்ததால், இந்த தஞ்சாவூர் பொம்மைகளின் வியாபாரம் குறைந்தது. கைவினைஞர்களிடையே இவற்றிற்கான முக்கியத்துவமும், இவற்றால் வரும் வருவாயும் வெகுவாகக் குறைந்தன. இதன் காரணமாக, இந்தத் தொழிலில் இருக்கும் குடும்பங்களின் இளைய தலைமுறையினர், குறிப்பாக ஆண்கள் இந்த கலையை கற்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.
இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த பல குடும்பங்கள் முன்னர் மாதத்திற்கு 400 பொம்மைகளை உருவாக்கின. சுற்றுலாப் பருவத்தில் இது மாதத்திற்கு 500-600 பொம்மைகள் வரை கூட சென்றது. ஒவ்வொரு பொம்மையின் விலையும் 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை இருக்கும். லாபத்தின் அளவு வெறும் 5 முதல் 10 ரூபாயாகத்தான் இருக்கும். ஆனால் இந்த லாபத்திற்கு கலைஞர்கள் எடுத்துக்கொள்ளும் சிரமமும் உழைப்பும் மிக அதிகமாகும். சரியான பதத்தில் களிமண்ணை கலந்து, வடிவம் கொடுத்து, அவற்றை உலர வைத்து, இயற்கை நிறங்கள் மூலம் அவற்றிற்கு வண்ணம் தீட்டி, கலைஞர்கள் அவற்றை கண்கவர் பொம்மைகளாக்குகிறார்கள்.
தனது உரையில் தஞ்சாவூர் பொம்மைகள் குறித்து கருத்து தெரிவித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்த கைவினைஞர்கள், கடந்த ஐந்து மாதங்களாக லாக்டௌன் காலத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டதாக தெரிவித்தனர். "எங்கள் வணிகம் முக்கியமாக சுற்றுலாப் பயணத்தைப் பொறுத்தது. நாங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டோம். வாழ்வாதாரம் முற்றிலுமாக ஸ்தம்பித்துவிட்டது” என்று கலைஞர்கள் கூறுகிறார்கள்.
பொம்மை உருவாக்கும் கலையை புதுப்பிக்க குறைந்தபட்ச வட்டியுடன் அல்லது மானியத்துடன் கடன்களை வழங்குமாறு அரசாங்கத்தை இந்தக் கலைஞர்கள் வலியுறுத்துகிறார்கள். மண் பானை தயாரிப்பாளர்களுக்கு இணையாக அரசாங்கம் குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு ஒரு மழை நிவாரண நிதியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் பள்ளிகளில் பொம்மை தயாரிக்கும் பயிற்சியை வழங்க வேண்டும் என்றும் இந்தக் கலைஞர்கள் கோரியுள்ளனர். அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்து தஞ்சாவூரின் பாரம்பரிய கலை வடிவத்தை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
உள்ளூரில் செய்யப்படும் இப்படிப்பட்ட பொமைகளை வாங்கி நம் உள்ளூர் கலைஞர்களின் வாழ்வாதாராத்தை வலுப்படுத்த நம்மால் ஆனதை நாமும் செய்ய வேண்டும். தஞ்சாவூரின் (Tanjavore) தலையாட்டி பொம்மைகள் மீண்டும் குதூகலத்துடன் தலையாட்டி நம்மை மகிழ்விக்க நாமும் நம் பங்களிப்பைக் கொடுப்போம்!!
ALSO READ: ஒரு மாதத்திற்குப் பிறகு மலிவானது Diesel, விலையுயர்ந்த Petrol இல் இருந்து நிவாரணம்....