சென்னை: உலகையே பாடாய் படுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் நிற்காமல் தொடர்ந்து தன் கோர தாண்டவத்தை ஆடிக்கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் இதுவரை 10,000 க்கும் மேற்பட்டோர் COVID-19 தொற்றால் இறந்துள்ளனர். வியாழக்கிழமை இந்த தொற்றால் 68 பேர் இறந்த நிலையில், தழிழகத்தில் COVID தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,000-ஐத் தாண்டி 10,052 ஆக உயர்ந்தது. 5,088 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை முதன் முறையாக 45,000 க்கும் கீழ் போனது. நேற்றைய நிலைப்படி இது 44,437 ஆக குறைந்துள்ளது.
39,000 க்கும் அதிகமான இறப்புகளைப் பதிவு செய்துள்ள மகாராஷ்டிராவுக்குப் (Maharasthra) பிறகு 10,000 இறப்புகளை எட்டியிருக்கும் இரண்டாவது மாநிலம் தமிழகம். தமிழகத்தில் இறப்பு விகிதம் (Fatality rate) 1.6% ஆகும். இது மகாராஷ்டிராவை விட (2.7%) குறைவாக உள்ளது. மேலும் நாட்டின் சராசரி இறப்பு விகிதமான 1.5% உடன் கிட்டத்தட்ட சமமாக உள்ளது.
அதிகாரிகளின் பகுப்பாய்வு, 90-99 வயதுக்குட்பட்டவர்களின் இறப்பு விகிதம் (Fatality Rate) 16% ஆக உள்ளது என்றும், 80-90 வயதுக்குட்பட்டவர்களின் இறப்பு விகிதம் 14% ஆக உள்ளது என்றும் கூறுகிறது. 50 வயதிற்குட்பட்டவர்களில் இறப்பு விகிதம் 1% க்கும் குறைவாக உள்ளது. எனினும், 61-70, 51-60 மற்றும் 71-80 வயதுக்குட்பட்டவர்களில் இறப்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த வயது வரம்புகளில் அதிகமாக உள்ளது.
ஒவ்வொரு 100 இறப்புகளில் 31 பேர் 61-70 வயதுடையவர்களாகவும், 24 பேர் 51-60 வயதுடையவர்களாகவும், 21 பேர் 71-80 வயதுடையவர்களாகவும் உள்ளனர். இறந்தவர்களில் குறைந்தது 33% பேருக்கு நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருந்தது. 25% பேருக்கு நீரிழிவு நோய் மற்றும் 13% பேருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தது.
வயது ஒரு ஆபத்து காரணி என்றாலும், 80 வயதிற்கு மேற்பட்ட 5,428 க்கும் மேற்பட்டவர்கள், 90 வயதிற்கு மேற்பட்ட 430 பேர் உட்பட, வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை அளித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நகரில், 90 வயதிற்கு மேற்பட்ட 40 நோயாளிகளில் 32 பேர் ஓமன்ந்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 29 நோயாளிகளில் 21 பேரும், கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 16 நோயாளிகளில் 14 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
அறிகுறி தென்பட்டவுடனேயே சிகிச்சையைத் துவக்குவதுதான் குணமடைவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துகின்றன என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
வியாழக்கிழமை, சென்னையில் (Chennai) 1,295 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 16 இறப்புகள் பதிவாகியுள்ளன. சென்னை உட்பட 11 வடக்கு மாவட்டங்களில் 2,553 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 37 பேர் இறந்தனர். எட்டு மேற்கு மாவட்டங்களில் 1,498 புதிதாக பாதிக்கப்பட்டனர். 15 இறப்புகளும் பதிவாகியுள்ளன. மேற்கு மாவட்டங்களில் கோயம்புத்தூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு 448 பேரும், சேலத்தில் 362 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் உள்ளவர்களைப் பொறுத்தவரை, மேற்கு மாவட்டங்களில் 12,622 பேரும், தெற்கு மாவட்டங்களில் 4,487 பேரும் மத்திய மண்டலத்தில் 4,428 பெரும் சிகிச்சையில் உள்ளனர்.
ALSO READ: Good News: Iodine based sanitiser-களை வெளியிடப்போகும் உலகின் முதல் நாடாகப்போகிறது இந்தியா
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR