நெல்லை மாவட்டம், களக்காடு அருகே பிரபல ரவுடி நீராவி முருகனை காவல்துறையினர் இன்று என்கவுண்டர் செய்தனர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நீராவி முருகன் யார்?, அவரது குற்றப் பின்னணி என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அடுத்த நீராவி மேட்டைச் சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல் துறைக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தார். ஆரம்பத்தில் சிறு சிறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நீராவி முருகன், நாளடைவில் கொலை, கொள்ளை, வழிப்பறி என பல்வேறு பெரிய குற்ற சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கினார். முருகன் என்ற இவரது பெயர் நாளடைவில் நீராவி முருகன் என்று மருவியது. தூத்துக்குடியை சேர்ந்தவர் என்றாலும் ஈரோடு, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று முருகன் கைவரிசை காட்டினார். குறிப்பாக நீராவி முருகன் சென்னையில் தங்கியிருந்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு பலமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | சென்னையின் பிரபல ரவுடி ''நீராவி முருகன்'' நெல்லையில் என்கவுன்டர்!
நீராவி முருகன் மீது கொலை வழக்கு மட்டும் மொத்தம் 3 உள்ளன. கொள்ளையடித்த பணத்தில் நீராவி முருகன் உல்லாச வாழ்க்கையும் வாழ்ந்து வந்துள்ளான். இந்த சூழ்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மருத்துவர் ஒருவர் வீட்டில் புகுந்து சுமார் 40 பவுன் நகைகளை நீராவி முருகன் திருடி சென்றுள்ளான். ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து நீராவி முருகனை பல நாட்களாக தீவிரமாக தேடிவந்தனர். அதில், தனது கூட்டாளிகள் உதவியுடன் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நீராவி முருகன் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையில் 4 போலீசார் களக்காடு அருகே மீனவன்குளம் என்ற பகுதியில் நீராவி முருகன் இனோவா காரில் சென்றபோது சுற்றிவளைத்தனர்.
மேலும் படிக்க | மனைவியை கொன்று கணவன் தற்கொலை; சடலங்களுடன் வீட்டில் தவித்த மகள்கள்!
அப்போது உதவி ஆய்வாளர் இசக்கிராஜா நீராவி முருகனை சரணடையும்படி கூறியுள்ளார். ஆனால் சரண்டைய மறுத்த நீராவி முருகன் தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான். இதனையடுத்து உதவி ஆய்வாளர் இசைக்கிராஜா தன்னிடம் இருந்த துப்பாக்கியில் நீராவி முருகனின் நெஞ்சை குறி வைத்து சுட்டு வீழ்த்தி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே நீராவி முருகன் பலியானார். என்கவுண்டர் சம்பவம் குறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவுக்கும் தெரிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். இச்சம்பவத்தில் எஸ்ஐ இசக்கி ராஜா உள்ளிட்ட நான்கு போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
யார் இந்த இசக்கிராஜா?
நீராவி முருகனை என்கவுண்டர் செய்த உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காவல் நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்தார். அப்போது கோவில்பட்டி பகுதியில் பல்வேறு ரவுடிகளுக்கு இசக்கிராஜா சிம்மசொப்பனமாக இருந்து வந்தார். அதாவது அப்பகுதியில் ரவுடிகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்தி நேரடியாக ரவுடிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு சிங்கம் சூர்யா பட பாணியில் மிரட்டல் விடுத்து வந்தார். இதன் மூலம் அப்பகுதி இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த அவர், சமூக வலைதளங்களில் சிங்கம் பட சூர்யாவுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசப்பட்டார். அவர் தான் இன்று தமிழக காவல்துறைக்கு தலைவலியாக இருந்து வந்த நீராவி முருகனை சுட்டுவீழ்த்தியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR