சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை... விஜய் மீது உதயநிதி அட்டாக் - ஆதவ் அர்ஜூனாவுக்கும் பதிலடி

Udhayanidhi Stalin: விஜய்யின் நேற்றைய பேச்சு குறித்து கேட்டதற்கு, தான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 7, 2024, 02:28 PM IST
  • திமுகவின் கூட்டணி கணக்குகள் மக்களால் மைனஸ் செய்யப்படும் - விஜய்
  • மன்னராட்சி தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட வேண்டும் - ஆதவ் அர்ஜூனா
  • யார் இங்கு பிறப்பால் முதல்வரானார்...? - உதயநிதி ஸ்டாலின்
சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை... விஜய் மீது உதயநிதி அட்டாக் - ஆதவ் அர்ஜூனாவுக்கும் பதிலடி title=

Udhayanidhi Stalin Slams TVK Vijay: 'அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழாதான் தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில நாள்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஒன்றாகும். விகடன் பிரசுரம் மற்றும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் Voice of Commons நிறுவனம் இணைந்து இந்த நூலை பதிப்பித்துள்ளது. இந்த நூலில் பல்வேறு ஆளுமைகள், எழுத்தாளர்கள், அம்பேத்கரிய செயற்பாட்டாளர்களின் நேர்காணல்கள், கட்டுரைகள், அம்பேத்கரின் அரிய புகைப்படங்கள், ஓவியங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.  

கடந்த ஒன்றரை மாதம் முன்பே இந்த நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய்யும், விசிக தலைவர் திருமாவளவனும் ஒரே மேடையில் தோன்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதியும் செய்த திருமாவளவன், தன்னிடம் ஓராண்டுக்கு முன்பாகவே இந்த நிகழ்ச்சி குறித்து தெரிவிக்கப்பட்டதாகவும், தற்போதுதான் சிறப்பு விருந்தினர்கள் பட்டியலில் தவெக தலைவர் விஜய் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் நேற்று திருமாவளவன் பங்கேற்கவில்லை. ஆதவ் அர்ஜூனா பங்கேற்றாலும் அங்கு விசிக தொண்டர்கள் பெரிதாக தென்படவில்லை. திரும்பும் பக்கம் எல்லாம் தவெக கொடியும், தொண்டர்களும், அவர்களின் முழக்கங்களுமே நிரம்பியிருந்தது. 

விஜய், ஆதவ் அர்ஜூனா அட்டாக்

இந்த நூலை வெளியிட்ட விஜய்,"இருமாப்புடன் இருநூறை (200 தொகுதிகளை) வெல்வோம், என்று எகத்தாளத்தோடு முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, மக்கள் சார்பாக நான் விடுக்கும் எச்சரிக்கை என்னவென்றால், நீங்கள் சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026ஆம் ஆண்டில் மக்களால் மைனஸ் செய்யப்படும்" என தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி, அவர்களையும் முழக்கமிடச் செய்தார்.

மேலும் படிக்க | திருமாவளவனுக்கு ஆதரவு! திமுகவிற்கு எதிர்ப்பு! விஜய்யின் அதிரடி பேச்சு!

மேலும் தொடர்ந்த விஜய்,"விசிக தலைவர் திருமாவளவன் அம்பேத்கர் சார்ந்த நூல் வெளியீட்டு விழாவுக்கே வரவில்லை என்றால் அவருக்கு கூட்டணி கட்சியால் எந்தளவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது என என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. திருமாவளவன் இங்கு வராவிட்டாலும் அவரது மனது இங்குதான் இருக்கும்" எனவும் பேசியிருந்தார். அதாவது திமுக கூட்டணியை சிதைக்கும் வியூகத்தை தவெக கைக்கொண்டிருப்பதாகவும், அதற்கு ஆதவ் அர்ஜூனா அவருக்கு பக்கபலமாக இருக்கிறார் எனவும் விஜய் குறித்து அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 

இதே நிகழ்ச்சியில் பேசிய விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா,"தமிழ்நாட்டில் மன்னாராட்சியை ஒழிக்க வேண்டும் எனவும் இனி பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாக கூடாது. தமிழகத்தை கருத்தியலை பேசக்கூடிய தலைவர்கள் தான் ஆள வேண்டும்" என பேசியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் அட்டாக்

இந்நிலையில், வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது காரில் அமர்ந்தவாறு செய்தியாளரின் சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவரிடம் நேற்றைய விஜய் நிகழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பியதற்கு நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என பதிலளித்தார். 

தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் எனவும் பிறப்பால் ஒருவர் முதல்வராவதை தடுக்க வேண்டும் என பேசியது குறித்து அவரிடம் கேட்டதற்கு, "யார் பிறப்பால் இங்கு முதல்வரானார், மக்கள் தேர்வு செய்ததாலேயே முதல்வராகி இருக்கிறார். அந்த அறிவு கூட இல்லையா அவருக்கு..." என்றார்.

மேலும் படிக்க | 'தற்குறிகளாக களத்திற்கு வராமல் பேசுகிறார்கள்...' விஜய்யை மறைமுகமாக தாக்கிய சேகர்பாபு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News