தேசிய மருத்துவக்கழக மசோதாவை கடுமையாக தமிழக அரசு எதிர்க்க வேண்டும்: ஸ்டாலின்

கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆபத்தாக அமைந்திருக்கின்ற தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு தமிழக அரசு தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 19, 2019, 06:46 PM IST
தேசிய மருத்துவக்கழக மசோதாவை கடுமையாக தமிழக அரசு எதிர்க்க வேண்டும்: ஸ்டாலின் title=

சென்னை: கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆபத்தாக அமைந்திருக்கின்ற தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு தமிழக அரசு தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.

அதுக்குறித்து அவர் சட்டசபையில் கூறியதாவது: 

நேற்றைய முன் தினம் மத்திய அமைச்சரவையில் தேசிய எக்ஸிட் தேர்வு குறித்து ஒரு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கின்றது. அதுகுறித்து சில விளக்கங்களை இந்த அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து நான் பெற விரும்புகின்றேன். தேசிய மருத்துவக்கழக அமைப்பு தொடர்பான மத்திய அரசின் புதிய மசோதா மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய வகையில் நேற்று முன்தினம் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. 

தேசிய மருத்துவக் கழகத்தின் உறுப்பினர்கள் நியமனத்தை பொருத்தமட்டில் தமிழகம் போன்று அதிக மருத்துவக் கல்லூரிகள் இருக்கக்கூடிய மாநிலத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப் படவில்லை. தேசிய மருத்துவக் கழகத்திற்கு உறுப்பினர்கள் தலைவரை தேர்வு செய்யக் கூடிய கமிட்டிக்கும், மாநிலங்களுக்கும் எந்தவித அதிகாரமும் இல்லை. முன்பு வெளிவந்த மசோதாவில் எம்.பி.பி.எஸ் முடித்த பிறகு தேசிய எக்ஸிட் தேர்வு வைத்திருந்தார்கள். தேசிய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து மருத்துவராகப் பணி புரிவதற்கு இது மிகவும் முக்கியம் என்றும் கூறியிருந்தார்கள்.

ஆனால் இப்பொழுது, எம்.பி.பி.எஸ் கடைசி வருடம் மத்திய அரசே ‘தேசிய எக்ஸிட் தேர்வு’ நடத்தும் என்று கூறியிருப்பது, மாநிலத்தில் இருக்கக்கூடிய மருத்துவக்கல்லூரி கட்டுப்பாட்டை முழுவதுமாக மத்திய அரசு எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு ஆபத்து இப்போது ஏற்பட்டிருக்கின்றது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு இந்த தேசிய எக்ஸிட் தேர்விலிருந்து விலக்களிக்கலாம் என்பது சென்னையில் இருக்கக்கூடிய மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ், ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ் போன்றவற்றை அவமதிக்கக்கூடிய போக்காக இது அமைந்திருக்கின்றது.

மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்லூரிகள் இல்லை என்று மத்திய அரசு கருதுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆபத்தாக அமைந்திருக்கின்றது. எனவே, தேசிய மருத்துவக் கழக மசோதாவை கடுமையாக நம்முடைய தமிழக அரசு எதிர்க்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகள் நடத்துவது மாநிலங்களுடைய உரிமை என்பதை மத்திய அரசிற்கு நம்முடைய மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்று நான் இந்த அவையின் கவனத்திற்கு கொண்டுவந்து அதே நேரத்தில் வலியுறுத்தி - வற்புறுத்தி கேட்டு அமர்கின்றேன்.

இவ்வாறு சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார். 

Trending News