சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
கேரளாவை (Kerala) சேர்ந்த பாத்திமா லத்தீப் (Fathima Latheef) என்ற மாணவி கடந்த மாதம் 9-ம் தேதி சென்னை ஐஐடி-யில் (Indian Institute of Technology Madras) முதலாமாண்டு முதுகலை பிரிவில் படித்து வந்த நிலையில், அவர் கல்லூரி வளாகத்திலேயே தற்கொலை செய்து கொண்டார்.
பெற்றோரை பிரிந்து இருந்ததால் மன அழுத்தம் காரணமாக பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டதாக விடுதி காப்பாளர் லலிதாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே, தனது மகளின் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பாத்திமாவின் தந்தை வலியுறுத்தினார். இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்த ஐஐடி மாணவி பாத்திமாவின் தற்கொலை வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.