பாரதியார் பிறந்தநாள்: சமுதாய சீர்திருத்தத்தின் சாரதி, தமிழ்த்தாயின் செல்லப்பிள்ளை பாரதி

பாருக்குள் பெண்களின் பாங்குயர பாட்டுப் படித்தான் பாரதி. காக்கை, குருவி, கண்ணன், கண்ணம்மா என அனைவருக்குமான கவிஞனானான் பாரதி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 11, 2020, 12:19 PM IST
  • தன் கவிதைகளால், மக்களின் தோய்ந்த கால்களை வலிமை வாய்ந்த கால்களாக்கினார் பாரதி.
  • உதவி கேட்டு ஏந்திய கைகளை உரிமை கேட்க வைத்தார்.
  • ஏங்கிய நெஞ்சங்கள் சுதந்திர உணர்வுகளை தாங்கிய நெஞ்சங்களாயின.
பாரதியார் பிறந்தநாள்: சமுதாய சீர்திருத்தத்தின் சாரதி, தமிழ்த்தாயின் செல்லப்பிள்ளை பாரதி title=

பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. யாரும் வீணாகப் பிறப்பதில்லை. ஆனால், சிலரது பிறப்பு மட்டும் தனிச்சிறப்பு வாய்ந்ததாக மாறிவிடுகின்றது. தனக்கென வாழாது பிறருக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்து வாழும் சிலர், வாழ்ந்த சிலர் இந்த மண் இருக்கும் வரை தங்கள் பெயரும் இருக்கச் செய்து விடுகிறார்கள்.

அவ்வகையில் நம் தமிழகத்தின் பெருமையாக என்றும் திகழ்பவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (Subramaniya Bharathiyar).

எட்டயபுரத்தில் பிறந்து எட்டு திசைகளையும் ‘பார்-அது-யார்?’ என்று பார்க்க வைத்தவர் பாரதியார். இன்றும் நாம் பாரதியாரைப் பற்றி நினைத்தால், வெள்ளை வேட்டி, கருப்புக் கோட்டு, மிடுக்காய் முண்டாசு, முறுக்கு மீசை என நம் கண்முன் அவரது கம்பீர தோற்றம்தான் தோன்றும். தோற்றத்தில் மட்டுமா கம்பீரம்? அவர் குரல், எழுத்து, செயல், வாழ்க்கை, சிந்தனை, கற்பனை என அனைத்துமே உறுதியின் உதாரணமாய், கம்பீரத்தின் காட்சியாய், சுயமரியாதையின் சாட்சியாய் அன்றோ இருந்தது!!

சுதந்திர போராட்டம் (Freedom Struggle) உச்சியில் இருந்த காலத்தில், தன் பாடல்கள் மூலம் மக்கள் மனங்களில் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார் பாரதி. சிறையில் அடிபட்டு, செக்கிழுத்து, நோவுற்று பெற்ற சுதந்திர போராட்டத்தின் வலி அவரது பாடல்களில் காணக் கிடைக்கும்.

தமிழ்த்தாயின் செல்லப்பிள்ளை, தமிழ் மொழியின் பொக்கிஷம், சாமானிய மனிதனிடம் சுதந்திரச் சுடரை ஏற்றிய அகல் விளக்கு, பெண் விடுதலைக்காக போராடிய துணிச்சலான ஆண்மகன், காக்கை, குருவி என அனைவரையும் சமமாக பாவித்த சமத்துவவாதி, நிறம் பார்க்காதே குணம் பார் என போதித்த ஞானி…..இப்படி பல, பல. ஒரு மனிதனுக்குள் இத்தனை மனிதர்களா என வியக்க வைத்த பாரதிக்கு அவர் வாழ்நாளில் கிடைத்தது என்னவோ அவமானங்களும் வசைகளும்தான்.

ஆனால், அவமானங்கள் என்றும் பாரதியை அசைத்துப் பார்ததில்லை. தன் நாட்டுக்கும், மொழிக்கும், மக்களுக்கும், சமூகத்துக்கும் சரி என தோன்றிய அனைத்தையும் அவர் செய்தார்.

அமரகவி பாரதி

சுப்பிரமணிய பாரதிக்கு ‘அமரகவி’ என்ற ஒரு பெயர் உண்டு. அதாவது, அவரது பாடல்கள் அவர் காலத்திற்கு மட்டுமல்லாமல் வரவிருக்கும் காலங்களுக்கும் பொருத்தமனதாய் இருந்தன. தீர்க்கதரிசியாய் வாழ்ந்த அவர் சொன்ன பல கருத்துகள் இன்றும் முழுவதுமாக பொருந்துவதைக் கொண்டு அவரது தெளிவையும் அறிவாற்றலையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

சீர்திருத்தவாதி பாரதி

‘ஏழையென்று அடிமை என்று எவருமில்லை சாதியில்

இழிவு கொண்ட மனிதரென்ப திந்தியாவில் இல்லையே….’

எத்தனை உன்னதமான சிந்தனை!! சமுதாயத்தில் பாகுபாடு பார்த்து மக்களை பிரித்து வைத்த பல தனவான்களுக்கு எதிராக குரல் கொடுத்தார் பாரதி. இந்தியாவில் யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லை என்று ஓங்கி உரைத்த பாரதியின் பேச்சுக்களால், மனதால் சோர்ந்து போயிருந்த மக்களுக்கு ஒரு புது வழி கிடைத்தது. அவர்களது இருண்ட வாழ்வில் ஒரு ஒளியாய் வீசினார் பாரதி, அவர்களுக்காக பெசினார் பாரதி.

‘தனி ஒருவனுக்கு உணவிலையெனில் இஜ்ஜகத்தினை அழித்திடுவோம்’ எனறு கோவமும் கவலையும் கலந்து அவர் எழுதிய வரிகள் இன்றும் நம்மை வாட்டுகிறது அன்றோ? இன்றும், இருப்பவர் இன்னும் வேண்டும் என ஆசைப்படுவதும், இல்லாதவர் இல்லாதவராகவே செத்து மடிவதும் நடந்துகொண்டுதானே உள்ளது!!

ஒடுங்கியவர்களின் ஒலியாய் எழும்பிய பாரதியைப் பார்த்து மேலிடத்து மேதாவிகள் மிரண்டு போயின. அவருக்கு மக்களிடையே இருந்த நற்பெயரை கெடுக்க ‘பித்து பிடித்தவன்’ என பெயர் சூட்டினர்.

பெண்விடுதலைக்கு போராடிய பாரதி

நம் நாட்டு சரித்திரத்தை சற்று திரும்பிப் பார்த்தால், பெண்களுக்காக குரல் கொடுத்தவர்களில் பாரதியின் பெயர் முதலிடத்தில் இருக்கும்.

‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்..’

என அவர் எழுதிச் சென்ற வரிகள் எத்தனை எத்தனை பெண்களுக்கு உறுதியையும் துணிவையும் அளித்துள்ளன!! ஆணுக்கு பெண் நிகர் என்ற கருத்தை மனதில் பதியும்படி வலியுறுத்தினார் அந்த பெண் விடுதலைப் போராளி. பெண்கள் துணிவையும் தைரியத்தையும் கொண்டு அஞ்சாத நெஞ்சுடனும் துணிவான எண்ணத்துடனும் ஆணுக்கு சமமாக வாழ வெண்டும் என பல முறை கூறி பெண்களுக்கு பக்கபலமாய் நின்றார். பயத்தால் பதுங்கியிருந்த பெண்களை புதுமைப் பெண்களாக மாற்றியதில் அவரது பாடல்களுக்கு ஒரு தனி பங்கு உள்ளது.

சமூகத்தின் பல தேவையற்ற சடங்குகளால் பெண்களுக்கு நடந்த கொடுமைகளைப் பார்த்து கொதித்தார் பாரதி. தீயின் நாவிற்கு தன் தீஞ்சுவை மேனியை ஒரு பெண் தீனியாக்கிய போதெல்லம் அந்த முண்டாசு கவிஞரின் மனம் பதபதைத்தது.

‘சோதனைகளைக் கண்டு துவண்டி விடாதே, அதை சாதனையாக்கிக் காட்டு’ என பெண்ணினத்தை புதிய பாதையில் அழைத்துச் சென்றார்.

ALSO READ: பொங்கல் பண்டிகை: அரசுப் பேருந்துகளில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். சுதந்திரம் பெற்ற சுந்தர நாட்டில் வாழ்கிறோம். ஆனால், பாரதி வாழ்ந்த காலம் அப்படி இருக்கவில்லை. பரட்டை முடியும், பசித்த வயிறும், பயந்த கண்களும், தோய்ந்த கால்களும், ஏந்திய கைகளும், ஏக்கத்துடன் நெஞ்சமும் கொண்டு இந்தியர் அனைவரும் அடிமைகளாய் வாழ்ந்த காலம் அது. சொந்த நாட்டில், சொந்த ஊரில் அடிமைகளாய் அனைவரும் அலைந்து திரிந்த காலம் அது. சிலர் அதை ஏற்றுக்கொண்டனர். பாரதியைப் போன்ற சிலர் அதை எதிர்த்து நின்றனர்.

பாரதியார் ஆங்கிலேயர்களின் கண்களில் அச்சத்தை வரவழைத்தார். பாரதீயம் என்ற எண்ணெயால் பரட்டை முடியை சீவிக்கொண்டார், சுதந்திர சிந்தனையல் பசித்த வயிற்றை நிரப்பிக்கொண்டார். விடுதலை வெறியால் அச்சத்தை இடம் மாற்றினார். தன் கவிதைகளால், மக்களின் தோய்ந்த கால்களை வலிமை வாய்ந்த கால்களாக்கினார். உதவி கேட்டு ஏந்திய கைகளை உரிமை கேட்க வைத்தார். ஏக்கத்துடன் இருந்த மனங்களுக்கு அடிமைத்தனத்தின் தாக்கத்தைப் பற்றி புரிய வைத்தார். ஏங்கிய நெஞ்சங்கள் சுதந்திர உணர்வுகளை தாங்கிய நெஞ்சங்களாயின.

விடுதலைப் பெற விழிப்புணர்வு பாடல்களைப் பாடினான் பாரதி…

பாருக்குள் பெண்களின் பாங்குயர பாட்டுப் படித்தான் பாரதி…

காக்கை, குருவி, கண்ணன், கண்ணம்மா என அனைவருக்குமான கவிஞனானான் பாரதி….

அன்று உயிரோடு நடமாடினான், பின்னர் உணர்வோடு விளையாடினான், என்றும் தன் கவிதைகளால் நம் கருத்தில் நிற்பான் நம் எட்டயபுரத்து கவிஞன் பாரதி!!!

ALSO READ: தமிழகத்தில் பிப்ரவரியில் பள்ளிகள் திறக்கப்படலாம்: அரசு கூறுவது என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News