உணவுத்துறை அமைச்சர் தலைமையில் மாநில அளவிலான கலந்தாய்வுக்கூட்டம்!

இன்று (28.01.2020) சென்னை சேப்பாக்கம், எழிலகம் கூட்டரங்கில் மாவட்ட வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்களுடன் மாநில அளவிலான கலந்தாய்வுக்கூட்டம், உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

Last Updated : Jan 28, 2020, 09:54 PM IST
உணவுத்துறை அமைச்சர் தலைமையில் மாநில அளவிலான கலந்தாய்வுக்கூட்டம்! title=

இன்று (28.01.2020) சென்னை சேப்பாக்கம், எழிலகம் கூட்டரங்கில் மாவட்ட வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்களுடன் மாநில அளவிலான கலந்தாய்வுக்கூட்டம், உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 233 நியாயவிலை அங்காடிகள் செயல்பட்டு விலையில்லா அரிசி திட்டம் உள்ளிட்ட தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் நடைமுறைகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஏனைய மாநிலங்களை போல், தனியார் எவரும் நியாயவிலை அங்காடிகளை நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. அனைத்து நியாயவிலை அங்காடிகளுக்கும் விற்பனை முனைய எந்திரங்கள் வழங்கப்பட்டு, பொது விநியோகத்திட்டம் முழு கணினிமயமாக்கப்பட்டுள்ளது.

இன்றளவில், 2 கோடியே 2 இலட்சத்து 30 ஆயிரத்து 886 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும், புதிய குடும்ப அட்டைகள் கோரி பெறப்பட்ட 1 இலட்சத்து 79 ஆயிரத்து 139 மனுக்களில் 1 இலட்சத்து 38 ஆயிரத்து 838 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 90 ஆயிரத்து 388 மனுக்கள் தகுதியின் அடிப்படையில் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சரியான தகவல்கள், ஆவணங்கள் சேர்க்கப்படாத 48 ஆயிரத்து 450 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள மனுக்களையும் விரைவாக பரிசீலனை செய்து, தகுதியின் அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்திய அமைச்சர், மின்னணு குடும்ப அட்டைகளுடன் கைபேசி எண்ணை இணைக்கும் பணி 99.51 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என்றும் கூறினார்.

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலமாக ஒவ்வொரு மாதமும், இரண்டாம் சனிக்கிழமையன்று நடத்தப்படும் குறைதீர் முகாம்களில், 8 இலட்சத்து 23 ஆயிரத்து 908 மனுக்கள் பெறப்பட்டு, 8 இலட்சத்து 400 மனுக்கள் மீது அன்றைய தினமே தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது பிற நாட்களில் தீர்வு காணப்பட்டது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, கோதுமை விலையில்லாமலும், பருப்பு, பாமாயில், சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவை மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருவதால் பொதுமக்களின் நலன் பாதுகாக்கப்படுகிறது. வெளிச்சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலையை தொடர்ந்து கண்காணித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டுமென அலுவலர்களை மாண்புமிகு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் மண்டல உதவி ஆணையர்களின் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் அவர்கள், பொது விநியோகத் திட்ட கிடங்குகள், அங்காடிகள் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்கவும், அத்தியாவசியப் பொருள்களின் மாதாந்திர ஒதுக்கீடு, இயக்கம் மற்றும் விநியோகத்தையும் சிறப்பான முறையில் கவனித்து வரவேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

தமிழ்நாட்டில், கடத்தலில் ஈடுபடும் வாகனங்களின் ஓட்டுநர்கள் மட்டுமல்லாது கடத்தலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை போகும் நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு காவல் துறையினரால் எடுக்கப்பட்டு வரும் கடுமையான தொடர் நடவடிக்கைகளால் இதுவரை 1,112 நபர்கள் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் திரு. சஜ்ஜன்சிங் சு ஷவான், இ.ஆ.ப., உணவு பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் திரு. பிரதீப் வி. பிலிப், இ.கா.ப., மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Trending News