சென்னை ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் சந்தோஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சென்னை அருகே, சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவரை, அவரை காதலித்து வந்ததாக சொல்லப்படும் நபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாதது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்நிலையில், சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் சந்தோஷ் சந்திரன் பல்வேறு ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில்., ''சென்னை கோடம்பாக்கம், மாம்பலம், சேத்துப்பட்டு, பரங்கிமலை, வில்லிவாக்கம், கொரட்டூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
இன்னும் ஒரு வாரத்தில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 5 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்காக குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.