சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 6 அடி உயர்ந்து நீர்மட்டம் 67.40 அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக் காரணமாக காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,50,500 கன அடியாக இருக்கும் நிலையில், மேட்டூர் அணைக்கு வந்தடையும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது
தென்மேற்கு பருவமழையால் கர்நாடக மாநிலத்தில் கடும் வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், அணைகளுக்கு வரும் நீர்வரத்து முழுவதும் பாதுகாப்புக் காரணத்துக்காக காவிரியில் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையில் வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்தும் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரியில் இதுவரை வரலாறு காணாத வகையில் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1,50,500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 6 அடி உயர்ந்து நீர்மட்டம் 67.40 அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு தொடர்ந்த அதிகரிக்கப்பட்டு வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.