10,12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..!
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.மேலும், தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு என்பது சாத்தியமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி மார்ச் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது. லாக்டவுன் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் விடைத்தாள் திருத்தும் பணி அண்மையில் தொடங்கி உள்ளது. சென்னையில் திருத்தும் மையங்கள் இல்லாத நிலை மற்றும் லாக்டவுன் காரணமாக பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி; மையங்களின் எண்ணிக்கை 67-ல் இருந்து 202-ஆக அதிகரிக்கப்பட்டது. மொத்தம், 44 ஆயிரம் ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தள்ளி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூன் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் பொதுத்தேர்வின் போது ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்றும் கடந்த மே 19 ஆம் தேதி அளித்த பேட்டியில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இதையடுத்து, செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறுகையில்... தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகள் சம்பந்தமாக எந்தக் குழப்பமும் வேண்டாம். தனியாா் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றுதான் கூறினேன். தற்போது கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டும்தான் கல்வி கற்றுத் தர முடியும். எனவே ஆன்லைன் மூலம் பாடம் எடுக்க எந்தத் தடையும் இல்லை. மாணவா்கள் எந்தப் பள்ளிகளில் படித்தாா்களோ அந்தப் பள்ளிகளிலேயே தோ்வு எழுதலாம் என்றாா்.