டி.ஜி.பி ஜெயலலிதாவுக்கு எழுதிய ரகசியக் கடிதம்: வருமான வரித்துறை!

குட்கா வழக்கில் டி.ஜி.பி ஜெயலலிதாவுக்கு எழுதிய ரகசியக் கடிதம் போயஸ் கார்டனில் சிக்கியதாக வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தகவல்.

Last Updated : Jan 12, 2018, 07:57 PM IST
டி.ஜி.பி ஜெயலலிதாவுக்கு எழுதிய ரகசியக் கடிதம்: வருமான வரித்துறை! title=

தமிழகத்தை உலுக்கிய குட்கா வழக்கில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய காவல் உயர் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பிருப்பதாக வருமான வரித்துறை ஆணையர் எழுதிய கடிதம் மற்றும் சிக்கிய டைரியின் பக்கங்களை ஆதாரமாக வைத்து எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

பின்னர் டி.ஜி.பி-யாக டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். டி.ஜி.பி நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வைத்து குட்கா விவகாரத்தில் தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் வருமான வரித்துறை புலானாய்வுத்துறை முதன்மை இயக்குனர் சுசீ பாபு வர்கீஸ் சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

வருமான வரித்துறை பிரமாண பத்திரத்தில் நாங்கள் குட்கா நிறுவன மேலாளர் மாதவ்ராவிடம் பிரிவு 132(4)-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் எச்.எம் மற்றும் சிபி (HM&CP) என குறிப்பிட்டது ஹெல்த் மினிஸ்டர் மற்றும் கமிஷனர் ஆஃப் போலீஸ் என்பதன் சுருக்கம் என்று தெரிவித்திருந்தார்.

2016-ல் ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன்-15, 2016 வரை சுமார் ரூ.56 லட்சத்தை கொடுத்ததாகவும், மேலும் பல்வேறு நபர்களுக்கு 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜூலை 6 -2016 வரை கொடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். இது குறித்த தகவல் வருமான வரித்துறை புலானாய்வுத்துறை முதன்மை இயக்குனர் அப்போதைய டி.ஜி.பி அஷோக்குமாருக்கு 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி எழுதிய கடிதத்தை வைத்து அப்போதைய டி.ஜி.பி அஷோக்குமார் ‘முக்கிய ரகசியம்’ என்று முதல்வருக்கு 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி எழுதினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் குட்கா விவகாரம் வெளிவந்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி வருமானவரித்துறை அதிரடியாக போயஸ் இல்லத்தில் உள்ள வேதா நிலையத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது சசிகலாவின் அறைகள் சோதனையிடப்பட்டது.

சசிகலாவின் அறையில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு அஷோக்குமார், செப்.2-ம் தேதி எழுதிய குட்கா விவகாரம் குறித்த கடிதம் சிக்கியது என வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை முதன்மை இயக்குநரின் அறிக்கையுடன் இணைத்து அப்போதைய டிஜிபி அஷோக்குமார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய ‘ரகசிய 

கடிதத்தையும்’ கைப்பற்றியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வருமான வரித்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி ‘டாப் சீக்ரெட்’ என டி.ஜி.பி அஷோக்குமார் என்ன எழுதியிருந்தார் என்பது குறித்து வருமான வரித்துறை பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் குட்கா விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

Trending News