சென்னை: சாத்தான்குளம் (Sathankulam) தந்தை, மகன் கொலை வழக்கில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் அதிமுக அரசு மீது திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டி வருகிறார். அவர் மீது நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் (Ma Foi K.Pandiarajan) எச்சரித்துள்ளார். மேலும் அவர் சாத்தன்குளம் சம்பவத்தில் தேவையின்றி கனிமொழி (Kanimozhi) அவர்கள் அரசியல் செய்கிறார் எனவும் கூறினார். ஆவடியில் கொரோனா நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்களை பார்வையிட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது திமுக எம்.பி. கனிமொழி கூறிய கருத்துக்கு பதிலடி தரும் வகையில் பேசினார். மேலும்
முன்னதாக திமுக எம்.பி. கனிமொழி (DMK MP Kanimozhi) "சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு உள்ளது என சந்தேகம் இருப்பதாகக் கூறியிருந்தார். இதுப்பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி (CBCID) கொலை வழக்குப் பதிவு செய்திருப்பதும், எஸ்.ஐ.ரகு கணேஷ் கைது செய்யப்பட்டிருப்பதும் காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் வரவேற்கிறேன். ஆனால், சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை கைது செய்யாமல் விட்டது ஏன்? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் செய்தி படிக்கவும் | இந்தியா தற்போது பாசிச நாடாக மாறி வருகிறது.... கனிமொழி ட்வீட்!
அதற்கு பதிலடி தரும் வகையில், அவர் மீது நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜே பென்னிக்ஸ் ஆகியோரை காவல் அதிகாரிகள் தாக்கியதால், அவர்கள் போலீஸ் காவலில் இறந்தனர். அவர்களுக்கு நீதி வேண்டும் என அனைத்து தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை தமிழக அரசு இடைநீக்கம் செய்தது. அதேநேரத்தில் இந்த சம்பவத்தை அடுத்து நீதிமன்றம் தாமாகவே முன் வந்து வழக்கு எடுத்தது.
தற்போது சாத்தான்குளம் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், 2 எஸ்.ஐக்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது காவலர் முத்துராஜூம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமு சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.