எம்எல்ஏ.கள் சுதந்திரமாக உள்ளனர், 129 எம்எல்ஏ.கள் எனக்கு ஆதரவு- சசிகலா

ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

Last Updated : Feb 13, 2017, 08:56 AM IST
எம்எல்ஏ.கள் சுதந்திரமாக உள்ளனர், 129 எம்எல்ஏ.கள் எனக்கு ஆதரவு- சசிகலா title=

சென்னை: ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

அதிமுக-வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. சட்டசபை அதிமுக கட்சியின் தலைவராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டதால் அவருக்கு வழிவிடும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கவர்னர் மாளிகையில் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான கடிதமும் கவர்னர் மாளிகையில் வழங்கப்பட்டது.

ஆனால், முதல்-அமைச்சராக பதவி ஏற்குமாறு கவர்னரிடம் இருந்து சசிகலாவுக்கு உடனடியாக அழைப்பு வரவில்லை.

இதற்கிடையே, தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாகவும், அவமானம் படுத்தியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி பேட்டி அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேட்டிக்கு பிறகு ஓ. பண்ணீர்செல்வத்தை அதிமுக-வின் பொருளாளர் பதவியிலிருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்தார்.

இதனால் அதிமுக-வில் பிளவு ஏற்பட்டு உள்ளது. ஆட்சியை பிடிப்பதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது. 

இருவரும் ஆதரவாளர்களை திரட்டும் நடவடிக்கையிலும், ஆட்சி அமைக்கும் முயற்சியிலும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக இருவரும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்கள். இதைத்தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

ஆனால், ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பது குறித்து கவர்னர் இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை. 

இதற்கிடையே கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களை நேற்று முன்தினம் சந்தித்து பேசிய பொதுச் செயலாளர் சசிகலா, நேற்று மீண்டும் அங்கு சென்று அவர்களை சந்தித்தார்.

இதற்காக சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட அவர், மாலை 4.50 மணிக்கு அங்கு போய்ச் சேர்ந்தார். கூவத்தூர் எல்லையில் பொதுமக்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பின்னர் சொகுசு விடுதிக்கு சென்ற சசிகலா அங்கு எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பேசிய அவர், பதவி ஏற்க அழைப்பு விடுப்பதற்கான நல்ல முடிவை கவர்னர் விரைவில் எடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

அதன்பிறகு, பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்த சசிகலா, பின்னர் சென்னை புறப்பட்டார்.

கூவத்தூர் சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் 94 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்தான் இருந்தார்கள் என்று கூறப்பட்டது. அதே நேரத்தில், கல்பாக்கம் அருகே பூந்தண்டலத்தில் உள்ள சொகுசு விடுதியில் 19 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருந்துள்ளனர். மேலும், அமைச்சர்கள் ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட ஒருசிலர் வெளியே இருந்ததால், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று கூவத்தூர் சொகுசு விடுதிக்கு சசிகலா சென்றபோது, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 127 பேர் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது.

கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், எங்களுடைய எம்.எல்.ஏ.க்கள் யாரையும் அடைத்து வைக்கவில்லை. இதை நீங்கள் கண்கூடாக பார்க்கிறீர்கள். நல்ல குடும்பமாக இங்கே இருக்கிறார்கள். அதில் இருந்தே நீங்கள் புரிந்த கொள்ளலாம். அடைத்து வைத்து இருக்கிறோம் என்று சொன்னார்கள். நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் அவர்கள் எவ்வளவு சுதந்திரமாக தங்கள் தனது மனதில் உள்ளதை சொல்லிக்கொண்டு, அதிமுக-வுக்கு எந்த பங்கமும் வந்து விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருப்பதை பார்க்கிறீர்கள்.

Trending News