ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில காவல்துறை தான் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பணபட்டுவாடா புகாரால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்துசெய்தது. இதனிடையே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை நடத்தக்கோரி ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் நடத்தும் என்று தெரிவித்து முடித்து வைத்தது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக தமிழக முதல் அமைச்சர், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த புகார் தொடர்பாகக் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் வைரக்கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ராஜேஷ் லக்கானி பதில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக, மாநில காவல்துறைதான் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.