கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம் என்பதால், சேதம் கணக்கிடும் பணி மற்றும் நிவாரணப் பணிகள் முடியவில்லை என எடப்பாடி அறிவிப்பு!
கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதல் அமைச்சர் பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக புதுக்கோட்டை வந்தார். பின்னர் புதுக்கோட்டை அருகாமையில் உள்ள மாப்பிள்ளையார் குளம், மச்சுவாடி உள்ளிட்ட பகுதிகளில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக முதல்வரின் பயணம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பாதியில் திரும்பினார் முதல்வர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கனமழை காரணமாக நாகை, திருவாரூர் மாவட்ட பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை. நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட மக்களை வேறொரு நாளில் சந்திக்க உள்ளேன். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம் என்பதால், சேதம் கணக்கிடும் பணி மற்றும் நிவாரணப் பணிகள் முடியவில்லை. நாளை மறுதினம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, புயல் சேதம் குறித்து விளக்க உள்ளேன். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை துல்லியமாக கணக்கிட்டு மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்போம் என தெரிவித்துள்ளார்.