எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு மருத்துவ பொது நுழைவுத் தேர்வை இந்த கல்வியாண்டில் நிறுத்தி வைக்கும் வகையில் மத்திய மந்திரிசபை குழு பரிந்துரை செய்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 24-ந் தேதி ஒப்புதல் அளித்தார்.
தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் இந்த ஆண்டு மட்டும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளித்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த அவசர சட்டத்தை எதிர்த்து மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்த் ராய் மற்றும் மருத்துவ மாணவர் சஞ்சீவ் சக்சேனா ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவசர சட்டம் சட்ட விரோதமானது மற்றும் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும், எனவே இந்த அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "மருத்து நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு தற்போதைக்கு தடை விதிக்க முடியாது. தேர்வில் இருந்து சில மாநிலங்களுக்கு இந்த ஆண்டு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு முழுமையாக மறுக்கவில்லை. தேர்வில் இருந்து சில மாநிலங்களுக்கு விலக்கு மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளது. அவசர சட்டத்துக்கு தடை விதித்தால் மாணவர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். தற்போது தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்து உள்ளது.