நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இன்று முதல் சந்திக்கிறார். ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நோக்கில் நடைபெறும் இந்தச் சந்திப்பு, வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி துவங்கியது. பின்னர், ஓகி புயலால் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ரஜினியுடன் தயாரிப்பாளர் கலைஞானம் மற்றும் இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முதலில் பேசிய தயாரிப்பாளர் கலைஞானம் கூறுகையில், “ அதிர்ஷ்டம் வரும் போது யாரும் குறுக்கே நிற்க முடியாது.
ரஜினி வீட்டில் இப்போது சுக்ரன் உட்கார்ந்து இருக்கிறார்; அருணாச்சலம் படத்தில் என்னையும் ஒரு தயாரிப்பாளராக்கியவர் ரஜினி” என்றார். ரஜினி முதன் முதலில் தனி கதாநாயகனாக நடித்த பைரவி படத்தை தயாரித்தவர் கலைஞானம் ஆவார்.
இதைத்தொடர்ந்து பேசிய இயக்குநர் மகேந்திரன் கூறியதாவது:- ” ரஜினியிடம் பிடித்தது நிதானம்; நிதானம் உள்ளவர்கள்தான் ஜெயித்து சாதனை படைக்கின்றனர்- யாரும்
வருத்தப்படும்படி நடிகர் ரஜினி நடந்து கொள்ளமாட்டார்; நிதானம் உள்ளவர்கள்தான் ஜெயித்து சாதனை படைக்கின்றனர்.
ரஜினியின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ரஜினி என்ன சொல்லப்போகிறார் என்பதை அறிய பொறுமை அவசியம். தலைவராக இருப்பவருக்கு நல்லது கெட்டதை சீர்தூக்கி பார்க்கும் மனோபாவம் தேவை. ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அரசியல் பேச வேண்டாம் என ரஜினி கூறினார். ஒரு நேர்மையான தலைவனுக்கு உள்ள அத்தனை குணாதிசயங்களும் ரஜினிக்கு உள்ளது” என்றார்.
#Rajinikanth interacts with fans in Sri Raghavendra Kalyana Mandapam in Chennai pic.twitter.com/gUNLeXlFTq
— ANI (@ANI) December 26, 2017