திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட தமிழக வீரர் சிவச்சந்திரன் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று வீர வணக்கம் செலுத்தினார்!
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த அரியலூரைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப். வீரர் சிவச்சந்திரனின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கார்குடி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சின்னையனின் மகன் சிவசந்திரன் எம்.ஏ. பி.எட். முடித்து கடந்த 2010 ஆம் ஆண்டு சி.ஆர்.பி.எப் வீரராக பணியில் சேர்ந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த காந்திமதியைத் திருமணம் செய்து வைத்த நிலையில், இரண்டு வயதில் சிவ முனி என்ற மகன் உள்ளார்.
காந்திமதி மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கணவர் சிவச்சந்திரன் வீரமரணம் அடைந்தார். கார்குடி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் கதறியழுதனர். உயிரிழந்த CRPF வீரர் சிவச்சந்திரனின் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி கொண்டுவரப்பட்டது. அங்கு சிவச்சந்திரன் உடலுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் சிவச்சந்திரன் உடலுக்கு மரியாதை செலுத்தினர். மேலும், திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட தமிழக வீரர் சிவச்சந்திரன் உடலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று வீர வணக்கம் செலுத்தினார்.
Tamil Nadu, Trichy: Defence Minister Nirmala Sitharaman lays a wreath on the mortal remains of CRPF Constable C. Sivachandran who lost his life in #PulwamaAttack pic.twitter.com/2VO91IePgD
— ANI (@ANI) February 16, 2019
திருச்சி விமான நிலையத்தில் மரியாதை செலுத்தப்பட்டதை தொடர்ந்து சிவச்சந்திரன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.