சென்னை: அரசுதான் பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்தது என்று, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் அப்பல்லோ டாக்டர்கள் இன்று விளக்கம் அளித்தனர்.
ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் குறித்து வந்த வதந்திகள் பரவி வருவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெயலலிதாவிற்கு சிறப்பு மருத்துவம் அளித்த ரிச்சர்ட் பியல் உள்ளிட்ட மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் அரசுதான் பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்தது என்று லண்டன் டாக்டர் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார். அதேநேரம், ரிச்சர்ட்டுக்கு சென்னையில் வேலை இருந்ததாகவும் அதனால்தான் அவர் வந்ததாகவும், அப்பல்லோ டாக்டர் தெரிவித்து குழப்பம் ஏற்படுத்தினார்.
பிரஸ் மீட் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் பாலாஜி, "டாக்டர் ரிச்சர்ட் இன்று சென்னையில் ஒரு நிகழ்வில் பங்கேற்க வந்தார். அவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த நிபுணர் என்பதால் அவரும் இருக்கும்போது பிரஸ் மீட் செய்யலாம் என்பதால் இன்று பிரஸ் மீட் செய்கிறோம். அரசு தரப்பில் இருந்து எங்களுக்கு பிரஸ் மீட் செய்ய எந்த அழுத்தமும் வரவில்லை" என்றார்.
அதேசமயம் இந்த கேள்விக்கு பதில் கொடுத்த ரிச்சர்ட் பீலே, இந்த பிரஸ் மீட் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதே தவிர, அப்பல்லோவால் கிடையாது என்று போட்டு உடைத்தார்.