குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!

தமிழகம் முழுவதும் 2வது தவணையான போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை காலை 7 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் 7.5 லட்சம் குழந்தைகளுக்கு 1640 மையங்களில் சொட்டு மருந்து வழங்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Last Updated : Mar 10, 2018, 12:42 PM IST
குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்! title=

தமிழகம் முழுவதும் 2வது தவணையான போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை காலை 7 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் 7.5 லட்சம் குழந்தைகளுக்கு 1640 மையங்களில் சொட்டு மருந்து வழங்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்கள் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

போலியோ சொட்டுமருந்து போடுவதால் எந்தவித தீங்கும் கிடையாது. அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டுமருந்து ஒரேநாளில் போட்டுக் கொள்வதன் மூலம், போலியோ நோய் பரவும் வைரஸ் கிருமிகள் அவர்களது ஜீரண மண்டலத்திலிருந்து அகற்றப்பட்டு அழிக்கப்படுகின்றது. இதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுச்சூழலிருந்து அறவே ஒழிக்கலாம். 

முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாமில் சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட 7.5லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து 1640 சொட்டுமருந்து மையங்களில் கொடுக்கப்பட்டது

குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டுமருந்து முறையாக கொடுத்திருந்தாலும் வரும் 11ம் தேதி நடைபெறும் இரண்டாம் தவணை போலியோ சொட்டுமருந்து முகாமில் அவசியம் சொட்டுமருந்து குழந்தைகளுக்கு போட்டுக் கொள்ள வேண்டும். 

மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையங்களில் நடமாடும் சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் இருந்து வேலைநிமித்தம் காரணமாக சென்னை மாநகரில் குடியேறி, இங்கு தொடர்ந்து தங்கி இருப்பவர்கள், இந்த நாளில் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து போட்டுக் கொள்ளலாம். 

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியம் ஆகும். அதுமட்டுமின்றி சென்னை வந்து போகும் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டுமருந்து போட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படுகிறது. இது விடுபடும் குழந்தைகளை கண்டறிய உதவுகிறது. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் டாக்டர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். 

போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சோதனை சாவடிகள், சுங்கச்சாவடிகள், விமான நிலையங்கள் என 1,652 பயணவழி மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 

பெற்றோர் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதே போல தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில், கடந்த ஜனவரி 28ம் தேதியை தொடர்ந்து தெற்கு ரயில்வே சார்பில் 2வது கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடைபெற உள்ளது. 

இந்த 2ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமானது ரயில்வே காலனி, ரயில் நிலையங்கள், ரயில்வே மருத்துவமனைகள், ரயில்கள் உள்ளிட்ட இடங்களில் சிறு அமைப்புகளாக பிரிந்து போலியோ சொட்டு மருந்தை கொடுக்கும் பணியில் ஈடுபட இருக்கிறது.

Trending News