உயிரைப் பறிக்கும் நவீன கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., வரமே சாபமாக மாறுவதைப் போன்று, தமிழகத்தில் பல மாவட்டங்களில் சிறுதொழில் தொடங்குவது உள்ளிட்ட தேவைகளுக்காக தேடி வந்து கடன் கொடுக்கும் நிறுவனங்கள், அதற்கு வட்டிக்கு மேல் வட்டி கேட்டு கொடுமைப்படுத்துவதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. நீண்டகாலமாக நீடிக்கும் இந்தக் நவீன கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்ட இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.
வறுமையின் பிடியிலிருந்து ஏழை மக்களை மீட்பதற்காக உருவாக்கப்பட்டது தான் நுண் கடன் எனும் அற்புதமான தத்துவம் ஆகும். இந்த தத்துவத்தை உருவாக்கிய வங்கதேச பொருளாதார வல்லுனர் முகமது யூனுசுக்கும், அதை செயல்படுத்த அவரால் தொடங்கப்பட்ட கிராமிய வங்கிக்கும் கடந்த 2006&ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதிலிருந்தே நுண்கடனின் சிறப்பை அறிந்து கொள்ள முடியும். அந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கு வங்கிகள் மூலம் நுண்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
மக்களின் நலனுக்கான எந்தவொரு தத்துவத்திற்கும், மோசமான எதிர்வினை இருக்கும் என்பதற்கு உதாரணமாக தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில், குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் நுண்கடன் என்ற பெயரில் கந்துவட்டி கலாச்சாரம் பெருகி வருகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அவர்கள் எத்தகைய தொழில் தொடங்கவுள்ளார்கள் என்பதை அறிந்து, பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் நுண்கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனுக்கு மிகக்குறைந்த வட்டி வசூலிக்கப் படுகிறது. வங்கிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மேற்பார்வையில் தான் இந்த குழுக்கள் செயல்படுகின்றன என்பதால், இவர்களுக்கு அதிக சிரமம் இன்றி கடன் கிடைக்கிறது.
ஆனால், மகளிர் குழுக்களில் இல்லாத பெண்களுக்கு குடும்ப விசேஷங்கள், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக பணம் தேவைப்படும் போது, அதை பெறுவதற்கு முறை சார்ந்த வாய்ப்புகள் எதுவும் இல்லை. இத்தகைய பெண்களைத் தான் நுண்கடன் நிதி நிறுவனம் நடத்தும் தனிநபர்கள் தங்களின் கந்துவட்டிப் பசிக்கு இரையாக்கிக் கொள்கின்றனர். பணம் தேவைப்படும் 10 பெண்களை அழைத்து, அவர்களைக் கொண்டு ஒரு குழுவை ஏற்படுத்தி, அவர்களுக்கு பெரிய அளவில் எந்த ஆவணங்களும் இல்லாமல், சில வெற்றுப் பத்திரங்களில் மட்டும் கையெழுத்து வாங்கிக் கொண்டு கடன் வழங்குகின்றனர். இந்த பணத்தை சிறு தவணைகளாக ஓராண்டுக்கு செலுத்தலாம் என்றாலும் கூட, அதற்காக வசூலிக்கப்படும் வட்டி இமாலயத்துக்கு இணையானதாகும்.
ஒரு குழுவில் 10 உறுப்பினர்கள் இருந்தால், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.20 ஆயிரம் கடனாக வழங்கப்படும். இந்தக் கடன் மற்றும் வட்டியை அவர்கள் 52 வாரங்களுக்கு தலா ரூ.625 வீதம் செலுத்தி அடைக்க வேண்டும். இந்த வகையில் பார்த்தால் 52 வாரங்களில் அவர்கள் ரூ.32,500 செலுத்தியிருப்பார்கள். நேரடியாகப் பார்த்தால் இது ஆண்டுக்கு 62.50% வட்டி போலத் தோன்றும். ஆனால், தவணை முறையில் பணம் செலுத்தப்படுவதை கணக்கில் கொண்டு பார்த்தால் மொத்த வட்டியின் அளவு 75 விழுக்காட்டைத் தாண்டும். வங்கிகளில் செய்யப்படும் வைப்பீடுகளுக்கு ஆண்டுக்கு 7% மட்டுமே வட்டியாகத் தரப்படும் நிலையில், அதைவிட சுமார் 10 மடங்கு தொகை வட்டியாக வசூலிக்கப்படுவது பகல் கொள்ளையை விட மிகவும் மோசமான குற்றம் ஆகும்.
இதைவிட கொடுமையானது என்னவென்றால், குழுவில் உள்ள ஒருவர் தவணையை செலுத்தத் தவறினால், அதற்கு குழுவில் உள்ள மற்ற பெண்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். வாரத்திற்கு ரூ.625 தவணை செலுத்த வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு ரூ.100 வீதம் சேமித்து வைக்க வேண்டும். கிராமப்புற ஏழை மக்களால் தினமும் ரூ.100 சேமிப்பது என்பது சாத்தியமற்றதாகும். இதனால் ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்கும் பெண்கள், ஒரு கட்டத்தில் கடன் வலையில் இருந்து மீள முடியாமல் சிக்கிக் கொள்கின்றனர். அது அவர்களை இறுக்கத் தொடங்குகிறது.
கடன் தவணையை ஒரு பெண் செலுத்தவில்லை என்றால் அதனால் ஏற்படும் கூடுதல் சுமையை மற்ற உறுப்பினர்கள் தான் சுமக்க வேண்டும் என்பதால், அவர்கள் சம்பந்தப்பட்டவரை வசவுகளால் அவமானப்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி, கடன் கொடுத்தவர்களும் சுடுசொற்களை வீசுவதுடன், சொத்துப் பறிப்பு, பாலியல் அத்துமீறல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இவற்றைத் தாங்க முடியாத பெண்களும், அவர்களின் கணவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இத்தகைய கந்துவட்டி தற்கொலைகள் நிற்காமல் நீடித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும். முதல் கட்டமாக, சிறுதொழில் தொடங்கவும், பிற தேவைகளுக்காகவும் ஏழைப்பெண்களுக்கு கடுமையான நிபந்தனைகள் இல்லாமல் ரூ.50 ஆயிரம் வரை கடன் வழங்கவும், அந்த தொகையை தினசரி தவணையாக வசூலிக்கவும் பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். இத்தகைய நவீன கந்துவட்டியின் தீமைகள் குறித்து ஏழைப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக கந்து வட்டி கும்பல்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.