திரையுலகில் ரஜினி ஹீரோவாக இருக்கலாம்; அரசியலில் ஹீரோவா ஜீரோவா என்பதை மக்கள் தான் முடிவு செய்வர் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு 'எந்த 7 பேர்?' என்று மறு கேள்வி கேட்ட ரஜினிகாந்தை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து, ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் பற்றி தெரியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் அல்ல என அவர் புதிய விளக்கம் கொடுத்தார். மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றி எனக்கு தெரியாது என்ற மாயையை சிலர் உருவாக்கி வருகின்றனர்; கேள்வியை தெளிவாக கேட்டிருந்தால் பதிலளித்திருப்பேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர்கள் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வார் கூறியதாவது....``நேற்று ஒன்று பேசிவிட்டு இன்று அதை மாற்றிப் பேசுகிறார் ரஜினி. எனவே, யார் எதை எப்படிச் சொன்னாலும் மக்கள் தான் எஜமானர்கள். எங்களைப் பொறுத்தவரை பா.ஜ.க மத்தியில் ஆட்சி நடத்துகிறது. அண்ணா கூறுவதுபோல மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி. எனவே, எங்கள் சுயாட்சியை நாங்கள் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என நேற்றே ரஜினி கூறியிருக்க வேண்டும். அவர் காலந்தாழ்த்தி பதிலளித்துள்ளார். ரஜினி சினிமாவில் வேண்டுமென்றால் பெரிய ஹீரோவாக இருக்கலாம். ஆனால், அரசியலில் அவர் ஹீரோவா ஜீரோவா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்" என அவர் தெரிவித்தார்.