மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்; வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மற்றும் தென்மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 25 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வாகனம் மேகமூட்டத்துடன் கணப்படும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாயப்பு உள்ளது. தென் தமிழக கடலோர பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் கடுமையான சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் நாளையும் நாளை மறுதினமும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவக்கோட்டை, பாலக்கோட்டில் 11 செமீ மழை பெய்துள்ளது. போச்சம்பள்ளியில் 9 செமீ, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆலங்குடி, தர்மபுரியில் தலா 8 செமீ மழை பதிவாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.