ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும்: பாமக ராமதாஸ்

ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அரசாணையை பிறப்பிப்பது துரோகம் ஆகும். அந்தவகையில், 243 ஆம் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 6, 2024, 12:20 PM IST
  • ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அரசாணை.
  • 243ஆம் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
  • அதிகபட்சமாக 5000 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் தான் பயனடைவர்.
ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும்: பாமக ராமதாஸ் title=

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் சமூகத்திற்கு நன்மை செய்வதாகக் கூறிக் கொண்டு தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணை எண் 243 இடைநிலை ஆசிரியர்களுக்கு, குறிப்பாக ஆசிரியையைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பறித்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காக ஆசிரியர்கள் போராடி வரும் நிலையில், அவர்களிடம் இருக்கும் உரிமைகளையும் அரசு பறிப்பது கண்டிக்கத்தக்கது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்காத தமிழக அரசு, இப்போது அரசாணை 243 என்ற பெயரில் அவர்களின் மீது பேரிடியை இறக்கியுள்ளது. கடந்த திசம்பர் 21ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையின்படி தொடக்கக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோரின் பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | ECR சொகுசு பங்களா நகை & பணம் திருட்டு விவகாரத்தில் போலீசாரின் அதிரடி கைது நடவடிக்கை!

அரசாணை 243இன் மூலம் ஒன்றிய அளவிலான முன்னுரிமை பறிக்கப்பட்டு, மாநில முன்னுரிமை திணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சொந்த ஒன்றியத்தில் பணியாற்றியவர்கள் தமிழகத்தின் கடைகோடி மாவட்டத்திற்கும் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். தொடக்கப்பள்ளிகளைப் பொறுத்தவரை 60% பெண்கள் தான் பணியாற்றுகின்றனர். கணவர் பணி செய்யும் இடம், குழந்தைகளின் கல்வி, குடும்பச் சூழல், சொந்த ஊரில் பணி செய்வதில் உள்ள வசதி உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் சொந்த ஒன்றியத்தில் பணி செய்வதையே விரும்புவார்கள்; வெளி மாவட்டத்திற்கு சென்று பணியாற்ற விரும்ப மாட்டார்கள். அதனால், அவர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டாலும் கூட, அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கும். அதனால், இடைநிலை ஆசிரியையாக பணியில் சேர்ந்த ஒருவர், ஓய்வு பெறும் போது அதே நிலையிலேயே ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படும். இது சமூக அநீதி.

243ஆம் அரசாணையின்படி, 20 ஆண்டுகளாக இருந்த பதவி உயர்வு நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கும், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 243ஆம் அரசாணையின்படி பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்த/ பதவி உயர்வு பெற்ற நாள் தான் தகுதி காணும் நாளாக கணக்கில் கொள்ளப்படும். அதன்படி, பட்டதாரி ஆசிரியராக 7 ஆண்டுகள் பணியாற்றியவருக்கும், பத்தாண்டுகள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், அதன்பின் 6 ஆண்டுகள் பட்டதாரி ஆசிரியராகவும் பணியாற்றியவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டால் மொத்தம் 16 ஆண்டுகள் பணியாற்றியவரை ஒதுக்கி விட்டு, 7 ஆண்டுகள் பணியாற்றியவருக்கு தான் பதவி உயர்வு வழங்கப்படும். இது என்ன நியாயம்?

தமிழக அரசின் இந்த புதிய ஆணை பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை. இதனால், அதிகபட்சமாக 5000 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் தான் பயனடைவர். ஆனால், இந்த அரசாணையால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர். இது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் இது ஒரு சிறப்பான அரசாணை என்று தமிழக அரசு பரப்புரை செய்து வருகிறது. ஆசிரியர்களின் பிரச்சினைகள் என்னவென்று கூட தமிழக அரசுக்கும், பள்ளிக்கல்வி அமைச்சருக்கும் தெரியவில்லை என்பதையே 243ஆம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது காட்டுகிறது.

தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் பதவி உயர்வு, ஊதிய விகிதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கடுமையான முரண்பாடுகளும், பாகுபாடுகளும் நிலவி வருகின்றன. அவற்றைக் களைய வேண்டும் என்பதற்காகத் தான் அரசு ஊழியர் அமைப்புகளும், ஆசிரியர் சங்கங்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதைக் கூட புரிந்து கொள்ளாமல் ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அரசாணையை பிறப்பிப்பது அவர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். இதை தமிழக அரசு உணர்ந்து கொண்டு துரோகத்தைக் களையும் வகையில், 243ஆம் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | கல்லை நட்டு பூஜைகள் செய்து சிலை என கூறும் மூடநம்பிக்கை அதிகரிப்பு - உயர்நீதிமன்றம் வேதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News