மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அரசாணையை மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டுள்ளது..!
கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இதுபற்றி உறுதியான எந்த தகவலையும் மத்திய அரசு கூறவில்லை. கடந்த ஜூன் 2 ஆம் தேதி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் கூறினார். அதேபோல், மதுரையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவின் இதை உறுதி செய்தார்.
இப்படி தமிழக அமைச்சர்கள் பலர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் எனறு நம்பி வந்த நிலையில், இன்று மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என தனது அரசிதழில் அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முதலாது எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது தமிழக மக்களுக்கும் குறிப்பாக மதுரை மாவட்ட மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு ரூ.1,264 கோடி நிதியை மத்திய அரசு, ஜப்பான் நாட்டு நிதி நிறுவனத்திடம் (ஜிக்கா) இருந்து கடனாக பெற்று மருத்துவமனை கட்ட உள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜப்பான் நாட்டு நிதிக் குழுவினா் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை நேரில் வந்து பாா்வையிட்டுச் சென்ற நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் ஆய்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.