புது டெல்லி: 17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இன்று மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவருடன் மத்திய அமைச்சரவையில் இடம் பெரும் அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
542 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கு அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது பாஜக. இந்தியா முழுவதும் மோடி அலை வீசினாலும், தமிழகத்தை பொருத்த வரை திமுக அலை தான் வீசியது என்று தான் கூற வேண்டும். பாஜக - அதிமுக கூட்டணி வெறும் ஒரே இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார்.
பாஜக - அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் என்பதால், அவரை எப்படியாவது அமைச்சராக்கி விட வேண்டும் என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல முயற்ச்சிகளை எடுத்து வந்தார். அதற்கான பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார். எப்படியாவது தனது மகனை அமைச்சராக்கி விட வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து ஓபிஎஸ் வேலை செய்து வந்தார்.
இதனை தொடர்ந்து மோடி அமைச்சரவையில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ஒரே அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு பாஜக தலைமை கேபினட் பதவி கொடுக்க உள்ளது என தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில், இன்று 25 பேர் கேபினட் அமைச்சர்களாவும் பதவியேற்றுக் கொண்டனர். அதில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் இடம் பெறவில்லை. இதன்மூலம் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.