மழைகாலங்களில் பள்ளிகளுக்கு விடப்படும் விடுமுறைகளில் புதிய கட்டுப்பாடுகளை வித்தித்து பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் சுற்றறிக்கையை வெளிட்டுள்ளார்!
மழை காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். மழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கான நெறிமுறைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
அந்த அறிக்கையில், எத்தகைய சூழலில் பள்ளிகளுக்கு விடுமுறை விடலாம் என்பதற்கான நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மட்டுமே விடுமுறை விட வேண்டும்.
தூறல், சாதாரண மழை பெய்யும் சூழலில் விடுமுறை விடக்கூடாது. பள்ளி தொடங்கும் 3 மணி நேரத்துக்கு முன்பே விடுமுறை விடலாமா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சூழ்நிலையைப் பொறுத்துப் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது பற்றியும் எந்தப் பகுதியில் விடுமுறை விடுவது என்பது பற்றியும் மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கலாம்.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை விட வேண்டும். ஒட்டுமொத்த மாவட்டத்துக்கும் விடுமுறை விட வேண்டியதில்லை. கல்வி மாவட்ட அளவில் அல்லது உள்ளாட்சிப் பகுதி அளவுக்குக் கூட விடுமுறை விடலாம்.
கோவில் திருவிழா உள்ளிட்ட பிற காரணங்களுக்காக விடுமுறை அறிவிக்கும்போது அதற்கு ஈடுசெய்யும் பணிநாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும். விடுமுறை விடப்படும் நாட்களுக்குச் சனிக்கிழமைகளில் ஈடு செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பாடத்திட்டம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவாகப் பள்ளியைத் திறக்க முடியுமோ அவ்வளவு விரைவாகத் திறக்க வேண்டும்.
பள்ளிகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தால் அதனை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியிருந்தால் அதனை வெளியேற்றிப் பள்ளியைத் திறக்க வேண்டும்.