ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து கியூப்பா அமைப்பு தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.
இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் நாரிமன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கொண்டு வரபட்ட வழிமுறைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வக்கீல்கள் தெளிவாக எடுத்துக்கூறினார்கள். மேலும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் 2 நாட்களில் அரசிதழில் வெளியிடப்படும் என மத்திய அரசு வக்கீல் தெரிவித்தார். அப்போது விலங்குகள் நல வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2016 உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற்றாலும், விசாரணை தொடர்ந்து நடத்த வேண்டும் எனக்கூறினார்.
நீதிபதிகள் கூறியதாவது:-
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் சுப்ரீம் கோர்ட்டின் 2014-ம் ஆண்டு தீர்ப்பு மாறாக உள்ளது. ஜல்லிக்கட்டை எதிர்ப்பது ஏன் என விலங்குகள் நல வாரியத்திடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. வழக்கு நிலுவையில் உள்ளபோது அது பற்றி பேசவேகூடாது என்பது சட்டம். ஆனால் இதை மீறி தமிழகத்தில் எப்படி போராட்டம் நடத்தினார்கள்? சட்ட மரபை மீறி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றது ஏன் ? ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்தார் நீதிபதி. சட்டம் ஒழுங்கை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனக்கூறிய அவர்கள், வன்முறையை தடுக்க தவறியது ஏன் என கேள்வி எழுப்பினர்.
மேலும், 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையை திரும்ப பெற்றுக்கொள்ள மத்திய அரசுக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர். ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்ததுடன், 6 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர அனுமதியும் வழங்கியது.