ஆ.ராசாவின் தேர்தல் செலவை குறைத்துக் காட்ட மிரட்டல் - ஆட்சியர் மீது அதிகாரி அதிரடி புகார்!

Nilgiri Collector: நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் தேர்தல் செலவு விவரங்களை குறைத்து காட்ட வலியுறுத்தி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அருணா மிரட்டுவதாக தேர்தல் ஆணையத்திற்கு உதவி செலவின கணக்கீட்டாளர் புகார் அளித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 11, 2024, 10:12 PM IST
  • வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம்
  • வேட்பாளர்கள் முதற்கட்ட செலவுகளை தற்போது தாக்கல் செய்ய வேண்டும்.
  • அதில்தான் தற்போது பிரச்னை எழுந்துள்ளது.
ஆ.ராசாவின் தேர்தல் செலவை குறைத்துக் காட்ட மிரட்டல் - ஆட்சியர் மீது அதிகாரி அதிரடி புகார்! title=

Complaint Against Nilgiri Collector: நாடு முழுவதும் 7 கட்டங்களாகவும், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவும் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப். 19ஆம் தேதி அன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்குப்பதிவு நடக்கிறது. இதன்படி தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட மார்ச் 16ஆம் தேதி முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. தேர்தல் முடிவு வரும் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும். 

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவ்வளவு தொகை செலவிடலாம் என்பது குறித்து தேர்தல் ஆணையம் வரையறை வகுத்துள்ளது. இதில் தேர்தல் பிரசாரக் கூட்டம்,  உணவு, கொடி, மாலை, வாகன விவரம், ஓட்டலில் தங்கும் செலவு உள்பட அனைத்தும் அடங்கும். இதன்படி 2024 நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம். இந்த தொகையை தாண்டி செலவு செய்தால் அந்த வேட்பாளர் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது.

ரூ. 41 லட்சம் வேறுபாடு

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் செலவு செய்த தொகையை முதல் கட்டமாக இதுவரை தாக்கல் செய்துள்ளனர். இதில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த செலவுக்கும், செலவினங்களை கணக்கிடும் அதிகாரிகள் வைத்துள்ள கணக்குக்கும் சில வித்தியாசங்கள் வருவது வழக்கமானதாகும். தேர்தல் முடிந்து 30 நாட்கள் நேரம் இருப்பதால் இறுதியில் இந்த விஷயங்கள் சரி செய்யப்படும்.

மேலும் படிக்க | வாக்குச்சாவடிகளில் ஏஜெண்ட் போட ஆள் இல்லாத கட்சி பாஜக - அதிமுக முன்னாள் அமைச்சர் அட்டாக்

இந்நிலையில் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிடுகிறார். இவர் முதற்கட்டமாக கடந்த ஏப். 8ஆம் தேதி வரை தாக்கல் செய்த செலவு கணக்கு விவரப்படி ரூ.13 லட்சம் வருகிறது. ஆனால் தேர்தல் செலவின அதிகாரிகள் கணக்கீட்டின்படி ரூ.54 லட்சம் வருகிறது. முதல் கட்டமாக ரூ. 41 லட்சம் வேறுபாடு வருகிறது. இதனால் திமுக வேட்பாளர் செலவு விவரங்களை குறைத்து காட்டுமாறு நீலகிரி தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான அருணா, உதவி தேர்தல் கணக்கீட்டாளர் சரவணனை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறைத்துக் காட்ட வலியுறுத்தல்

இதுகுறித்து உதவி தேர்தல் கணக்கீட்டாளர் சரவணன் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பியுள்ளார். இந்த புகார் மனுவில், "நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சார் கருவூலகத்தின் தலைமை அலுவலகத்தில் உதவி செலவின கணக்கீட்டாளராக பணியாற்றி வருகிறேன். தேர்தல் செலவு விவரங்களை கணக்கிட்ட போது திமுக தொகுதி வேட்பாளர் தாக்கல் செய்த செலவில் பல லட்சங்கள் வித்தியாசம் உள்ளது. 

இந்நிலையில் நீலகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அருணா, ஆ.ராசாவின் செலவின விவரங்களை குறைத்துக் காட்ட வலியுறுத்துகிறார். செலவின விவரங்களை ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு கொண்டுவரச் சொல்லி பார்வையிட்டு ஆவணங்களை நகலெடுத்துக்கொண்டார். வேட்பாளரின் செலவு விவரங்களில் ஏதாவது பாதகமாக நடக்கக் கூடாது என  மிரட்டுகிறார். 

சத்யபிரத சாகு சொன்னது என்ன?

தன்னை தேர்தல் பணிகளை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த முடியாதவாறு இடையூறு செய்கிறார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் கூறப்பட்டு உள்ளது. நீலகிரி தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான அருணா மீது தேர்தல் உதவி இறக்கீட்டாளர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருந்தது. 

இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தில் உதவி செலவின பார்வையாளர் புகார் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். நீலகிரியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்பியுமான ஆ. ராசா போட்டியிடும் நிலையில், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் மற்றும் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். 

மேலும் படிக்க | ''தமிழ்நாட்டிற்கு குறைந்த நிதியே ஒதுக்கப்படுகிறது'' - எ.வ.வேலு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News